அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

us_army_001அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான திட்டங்களை பாதுகாப்புச் செயலாளர் ஷக் ஹேஜெல் வெளியிட்டுள்ளார்..

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட மிகவும் குறைந்தளவிலான எண்ணிக்கைக்கு தற்போதைய இராணுவத்தினர் குறைக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

புதிய வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைய, தற்போது காணப்படும் இராணுவத்தினரின் அளவை 5,20,000 இல் இருந்து 4,50,000 ஆக குறைக்கவுள்ளதாக பெண்டகன் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், இந்தத் திட்டத்திற்கு காங்கிரஸ்சின் அங்கீகாரம் பெறப்படவேண்டியுள்ளது.

இராணுவத்தினர் குறைக்கப்பட்டாலும், அமெரிக்கா எந்தவொரு எதிரியையும் சமாளிக்கும் வல்லமை கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஷக் ஹேஜெல் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறையத் தொடங்கிய போதிலும், 2001ஆம் ஆண்டின் பின்னர் இராணுவ செலவுகள் இரட்டிப்பாகியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

எனவே, ஆப்கான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் முன்னெடுத்ததைப் போன்று நீண்டகால, அதிக செலவுள்ள படை நகர்வுகளை எதிர்வரும் காலங்களில் குறைத்துக்கொள்ள எண்ணியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பல கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஷக் ஹேஜெல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு கொள்கைகளுக்கு மேலதிகமான இராணுவத்தினர் தற்போது காணப்படுவதால், இந்தத் தீர்மானம் தவறான பிரதிபலிப்புக்கள் எதனையும் ஏற்படுத்தாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.