யுக்ரெய்னில் விமான தளத்தை ரஷ்ய படையினர் சுற்றிவளைத்தனர்

russயுக்ரெய்னின் தென்பிராந்தியமான கிரைமீயாவில் செவாஸ்டபோல் என்ற ஊரின் இராணுவ விமான தளத்தை ரஷ்ய கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சர் கூறுகிறார்.

இது ஒரு ஆயுதப் படையெடுப்பு என்றும் ஆக்கிரமிப்பு என்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறும் செயல் என்றும் கூறி உள்துறை அமைச்சர் ஆர்சென் அவகொவ் கண்டித்துள்ளார்.

கிரைமீயாவில் நடந்துவருபவற்றை ஐநா பாதுகாப்பு சபை கண்காணிக்க வேண்டும் என யுக்ரெய்ன் நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விமான தளத்துக்குள் யுக்ரெய்னிய படையினரும் எல்லைக் காவல் படையினரும் இருக்கிறார்கள் என்றும், மோதல் எதுவும் நடக்கவில்லை என்றும் அவகொவ் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தின் தலைநகரான சிம்ஃபெரொபோலின் அருகேயுள்ள வேறொரு விமான நிலையத்தை ரஷ்ய ஆதரவு ஆயுதக்குழு ஒன்று கைப்பற்றியுள்ளது.

வியாழனன்று கிரைமீயாவின் நாடாளுமன்றத்தினுள் டஜன் கணக்கான சிப்பாய்கள் அதிரடியாக நுழைந்து அமைச்சரவையைக் கலைத்துவிட்டு புதிய பிரதமர் ஒருவரை நியமித்திருந்தனர். -BBC