சீனாவில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்களிடமிருந்து சுமார் 400 குழந்தைகளை மீட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
குழந்தைகளைக் கடத்தும் குற்றக்கும்பல் வலையமைப்பைச் சேர்ந்த 1000 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்தக் குற்றக்கும்பல்கள் இணையதளங்களில் அதிகாரபூர்வமற்ற தத்து கொடுக்கும் நிறுவனங்களாக இயங்கி குழந்தைகளை விற்றுவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் கடத்தலை முறியடிப்பதில் நவீன தொழிநுட்பங்கள் பெரும் சவாலாக இருப்பதாக சீன அரச ஊடகம் கூறுகிறது.
சீன சமூகத்தில் பாரம்பரியமாகவே ஆண்குழந்தைகளை விரும்புகின்ற போக்கும் கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையும் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவதற்கு மேலும் வசதியாக அமைந்துவிடுகிறது.
குழந்தைகளை கடத்துதல் அல்லது பெற்றோரிடமிருந்து வாங்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். -BBC