முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவது தொடர்பாக ஏற்பட்ட மக்கள் போராட்டத்தில் அந்நாட்டு ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும், புதிய தேர்தல்கள் நடத்துவதும் குறித்த ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 27ஆம் திகததி அந்நாட்டின் கிரிமியா பகுதியில் உள்ள தாத்தார் சமூகத்தின் ஆயுதமேந்திய சீருடை ஆண்கள் அரசு அலுவலகங்களைச் சிறைப்பிடித்தனர். அங்கு தொடர்ந்த கலவரங்களை அடக்க அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யா தனது துருப்புகளை உக்ரைனுக்கு அனுப்பியது.
ரஷ்யாவின் சோச்சி நகரில் சமீபத்தில் முடிவடைந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் 4,5 திகதிகளில் ஜி-8 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது அங்கு நடைபெற்று வருகின்றன. ரஷ்யா கிரிமியாவிற்கு தனது ராணுவப் படைகளை அனுப்பியதை ஆட்சேபிக்கும் விதத்தில் உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஜி-7 மற்றும் ஜி-8 உச்சி மாநாடுகளின் குறிக்கோளான இணக்கத்தன்மை கொள்கைகளுக்கு எங்கள் ரஷ்யப் பங்காளிகள் மீண்டும் திரும்பும் வரை மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரென்ட் பேபியஸ் குறிப்பிட்டார்.
ரஷ்யப் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்று உக்ரைன் நாட்டிற்குப் படைகளை அனுப்பியுள்ள ரஷ்யாவின் ராணுவ விரிவாக்கத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.