உக்ரைனில் பதற்றம்: ரஷிய படைகளை வாபஸ் பெற புதினிடம் ஒபாமா வலியுறுத்தல்

russiaஉக்ரைனில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தில் இருந்து ரஷியப் படைகளை வாபஸ் பெறும்படி அந்நாட்டின் அதிபர் விளாதிமீர் புதினிடம், அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சனிக்கிழமை தொடர்பு கொண்டு 90 நிமிடம் பேசினார். அப்போது, “”உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ரஷியாவின் விதிமீறல்கள் கவலையளிப்பதாக உள்ளது. அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், கிரீமியா பிராந்தியத்தில் நிறுத்தியுள்ள தனது படைகளை ரஷியா வாபஸ் பெற வேண்டும். அந்நாட்டின் எந்தப் பகுதியிலும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

உக்ரைனில் சிறுபான்மையினராக உள்ள தனது மக்களைப் பற்றி ரஷியா கவலை கொண்டிருந்தால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கான பாதுகாப்பு அமைப்பு போன்ற சர்வதேச கண்காணிப்பாளர்களின் மூலம் அந்நாட்டு அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை செய்வதில் அமெரிக்கா பங்கெடுக்கும்” என்று புதினிடம் ஒபாமா வலியுறுத்தினார். மேலும், பிரான்ஸ் அதிபர் ஹொலந்த் மற்றும் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ஆகியோரிடமும் ஒபாமா தொலைபேசியில் பேசினார். அப்போது, ரஷியாவின் நடவடிக்கை தொடர்பான அமெரிக்காவின் கவலையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒபாமாவுக்கு நெருக்கடி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால் படை பலத்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்திடம் புதின் கடந்த புதன்கிழமை கேட்டிருந்தார். அதையடுத்து நாடாளுமன்றமும் ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷியா போர் தொடுக்கலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.

ஆனால், உக்ரைனில் அமைதி திரும்பியுள்ள நிலையில் ரஷியாவின் நடவடிக்கை ஒபாமாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு நிகரான வல்லரசு நாடாகக் கருதப்படும் ரஷியாவின் போர் முயற்சியை சர்வதேச சமுதாயத்தின் உதவியுடன் தடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஒபாமா தள்ளப்பட்டுள்ளார்.

ரஷியா தனது படைகளை வாபஸ் பெற மறுக்கும்பட்சத்தில், அந்நாட்டின் சோச்சி நகரில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி8 மாநாட்டை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

இதற்கிடையே, ரஷியா படையெடுக்க முயற்சிப்பதாவும், இதனால் அமெரிக்க-ரஷிய இருதரப்பு உறவில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகல், ரஷியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்குவிடம் தொலைபேசி மூலம் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.