உக்ரைனின் தன்னாட்சிப் பிராந்திய பகுதியான கிரீமியாவின் கிழக்கு படகுத் துறைமுகப் பகுதியை ரஷிய ஆதரவாளர்கள் கடந்த திங்கள்கிழமை கைப்பற்றினர்.
இந்தப் பிராந்தியம் அமைந்துள்ள கருங்கடல் பகுதியில் மேலும் படைகளை குவிக்கும் ரஷியாவின் திட்டத்தால் உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ரஷியாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த படகு நிலையத்தை ஆயுதங்களுடன் வந்த நபர்கள் அதிரடியாகக் கைப்பற்றினர். மேலும்
கிரிமியா தன்னாட்சிப் பகுதி நாடாளுமன்றம், விமான நிலையம் ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ரஷியா கொண்டு வந்தது.
உக்ரைன் பிரச்னையில் ரஷிய தலையீடு தீவிரமாகி வருவதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபிராங் வால்டர் ஸ்டீன்மீயர் கூறுகையில்,”ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழில்துறையில் முன்னணி வகிக்கும் 8 நாடுகளில் இருந்து அந்நாடு வெளியேற்றப்படும்” என்றார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷியா மீது பொருளாதார மற்றும் விசா தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தார். இந்நிலையில் ,ரஷ்யாவுடனான தனது ராணுவ ரீதியான உறவுகளை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அமெரிக்கா திடீரென அறிவித்தது. இதனையடுத்து கிரிமியாவிலிருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதா ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.