ஆசிட் வீச்சால் பாதிப்படைந்து, அதற்கு எதிராகப் பிராசரத்தில் ஈடுபட்டு வரும் இந்தியப் பெண் லக்ஷ்மிக்கு சர்வதேச வீரப் பெண்மணி விருதை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா வழங்கினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் லக்ஷ்மியுடன் ஆப்கன், ஃபிஜி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு தில்லியில் பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு, மரணத்துக்கு பிந்தைய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
விருது பெறும்போது ஹிந்தி மொழியில் லக்ஷ்மி கவிதை ஒன்றை வாசித்தார். அதில், “நீ (ஆசிட் வீசிய நபர்) என் முகத்தின் மீது ஆசிட்டை வீசவில்லை. எனது கனவுகள் மீது வீசினாய். உனது இதயத்தை நீ நேசிக்கவில்லை. உனது இதயத்தில்கூட ஆசிட்டே நிரம்பி உள்ளது’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
விருது பெற்ற பின் லக்ஷ்மி கூறியதாவது:
இந்த விருது இந்தியாவில் உள்ள பெண்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாக அமையும். இதனால், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க பெண்கள் முன்வருவர்.
உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, திராவக விற்பனை நடந்து வருகிறது. பெண்கள் மீதான ஆசிட் தாக்குதலைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்ணுக்கு இழப்பீட்டுத் தொகையுடன், மருத்துவ உதவியும் அரசே அளிக்க வேண்டும். பாதிப்படைந்த நபருக்கு அரசு வேலையும், விரைவு நீதிமன்றத்தின் மூலம் உரிய நீதியும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். அனைத்து அரசியல் கட்சியினரும், இதனை தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்றார்.
மிஷெல் பாராட்டு: வீரமிக்க பெண்களுக்கான சர்வதேச விருதுகளை வென்றவர்களுக்கு மிஷெல் ஒபாமா பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், “தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை எதிர்த்து குரல் எழுப்பி, அதன்மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த பெண்களைப் பார்க்கும்போது, நம்மில் ஒவ்வொருவரிடமும் அதே ஆற்றலும், பொறுப்பும் உள்ளதை நாம் அறிய வேண்டும்’ என்றார்.
பின்னணி: காதலை ஏற்க மறுத்ததால், 2005-ம் ஆண்டு தில்லியில் கான் மார்கெட் பகுதி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது லக்ஷ்மி மீது அவரது நண்பரின் சகோதரர் (32) ஆசிட்டை வீசினார். அப்போது லக்ஷ்மிக்கு வயது 16. தாக்குதலுக்குப் பின், மருத்துவ சிகிச்சை மூலம் மீண்டு வந்த அவர், ஆசிட் தாக்குதலுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடைகளில் ஆசிட் எளிமையாகக் கிடைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஆசிட் விற்பனை செய்வதில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.