உக்ரைனின் கிரீமியா பகுதியில் ரஷிய படையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் ஆயுதம் தாங்கிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதையடுத்து மேற்கத்திய நாடுகள் – ரஷியா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
கிரிமீயாவை விட்டு வெளியேற வேண்டும் என மேற்கத்திய நாடுகள் ரஷியாவை எச்சரித்து வரும் நிலையில், இந்த படைக் குவிப்பின் மூலம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை ரஷியா உணர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உக்ரைன் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சனிக்கிழமை கூறுகையில், “”கடந்த 24 மணி நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட ரஷிய ராணுவ லாரிகளில் வீரர்கள் கிரீமியாவுக்குள் வந்தனர்.
ரேடார் கண்காணிப்பு மையம் ஒன்றில் சீருடையிலும், சாதாரண உடையிலும் வந்த ரஷிய ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி அங்கிருந்த சாதனங்களை சேதப்படுத்தினர்” என்று தெரிவித்தார்.
ராணுவ நிலைகள் சுற்றி வளைப்பு: அது மட்டுமின்றி, கிரிமீயா பகுதியிலுள்ள உக்ரைனிய ராணுவ நிலைகளையும் ரஷிய ஆதரவுப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டி பேரணிகளால் பதற்றம்: இதற்கிடையே, உக்ரைன் விடுதலைக்காக போராடிய 19-ஆம் நூற்றாண்டு கவிஞர் தாரஸ் ஷெவிசென்கோவின் 200-ஆவது நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை ரஷிய எதிர்ப்பாளர்களும், அவர்களுக்கு எதிராக ரஷிய ஆதரவாளர்களும் பேரணி நடத்துவதாக அறிவித்ததையடுத்து உக்ரைனின் டானெட்ஸ்க் நகரில் பதற்றம் ஏற்பட்டது.
தாக்குதல்: கிரீமியாவில் ஞாயிற்றுக்கிழமை ரஷியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்காணவர்கள் மீது ரஷிய ஆதரவாளர்கள் உருட்டுக் கட்டைகளையும், சாட்டைகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இடைக்கால பிரதமர் சூளுரை: தலைநகர் கீவில் தனது ஆதரவாளர்களிடையே ஞாயிற்றுக்கிழமை பேசிய இடைக்கால பிரதமர் ஆர்செனை யாட்சென்யுக், “”உக்ரைன் நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தைக் கூட ரஷியாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்” என உறுதியாகத் தெரிவித்தார்.