உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெற்றதற்கான தீர்மானம், கிரீமியா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யாணுகோவிச் தனக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததையடுத்து ரஷியாவுக்கு தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து உக்ரைனின் ஆட்சிக்கு உள்பட்டு தன்னாட்சி பகுதியாக விளங்கிய கிரீமியா பகுதிக்குள் ரஷியா தனது ராணுவத்தை அனுப்பியது.
அதனைத் தொடர்ந்து ரஷியாவுக்கு ஆதரவான ஆயுதக் குழு ஒன்று, கிரீமியாவில் உள்ள விமான நிலையம் உள்பட பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெற்றதற்கான தீர்மானம் கிரீமியா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை ஆதரித்து கிரீமியா நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 81 உறுப்பினர்களில் 78 பேர் வாக்களித்தனர்.
ரஷியாவுடன் கிரீமியாவை இணைப்பதற்கு வசதியாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தீர்மானத்தை சட்ட விரோதமானது என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. அதேசமயம் சட்டத்துக்கு உள்பட்டே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், கிரீமியாவை குடியரசு நாடு என்றும், கிரீமியா மக்களின் உணர்வுகளுக்கு ரஷியா மதிப்பு அளிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கலாமா? என்பது தொடர்பாக கிரீமியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
கிரீமியாவில் விமானங்கள் நிறுத்தம்: இதனிடையே கிரீமியாவில் உள்ள சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை ரஷியா ஆதரவு ஆயுதக் குழுவினர் செவ்வாய்க்கிழமை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்து ரஷியா தவிர பிற பகுதிகளுக்கு இயக்கப்பட்ட விமான போக்குவரத்து அனைத்தையும் ரத்து செய்து விட்டனர்.
உக்ரைனுடன் போர் மூளும்பட்சத்தில், சண்டையிடுவதற்காக ரஷியா ஆதரவு ஆயுதக்குழுவினர், தங்களது படைக்கு புதிதாக ஆள்களை தேர்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ரஷியாவுக்கு தப்பியோடிய விக்டர் யாணுகோவிச் உக்ரைனின் அதிபர் தாம்தான் என்றும், மீண்டும் உக்ரைனுக்கு திரும்பி வரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
ரஷியாவுக்கு எச்சரிக்கை: உக்ரைன் விவகாரத்துக்கு சுமுகத் தீர்வு காண மேலை நாடுகள் முன்வைத்துள்ள திட்டத்தை ரஷியா ஏற்க வேண்டும் என்றும், இல்லையெனில் அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் பிரான்ஸ் நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி ரத்து செய்து விட்டார்.