உக்ரைன் எல்லையில் நேட்டோ கண்காணிப்பு விமானங்கள்

AWACSஉள்நாட்டுப் பிரச்னை மற்றும் ரஷிய ராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் நிலவரத்தைக் கண்காணிக்க நேச நாடுகளின் கூட்டுப்படை (நேட்டோ) தனது இரு கண்காணிப்பு விமானங்களை அந்நாட்டின் எல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ளது.

ஒரு நாட்டின் வான் எல்லைக்கு அப்பால் பறந்தவாறே அந்நாட்டைக் கண்காணிக்கும் திறன் கொண்ட “அவாக்ஸ்’ (எர்போர்ன் வார்னிங் அண்டு கன்ட்ரோல் சிஸ்டம்) தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இந்த இரு அதி நவீன விமானங்களும் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து மற்றும் ருமேனியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து நேட்டோ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “”உக்ரைன் மற்றும் ரஷிய வான் எல்லைக்குள் நுழையாமல் நேச நாடுகளில் இருந்தவாறே, உக்ரைனின் 3 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பகுதியை இந்த விமானங்கள் கண்காணிக்கும்.

குறிப்பாக வான் மற்றும் கடல்பகுதியில் நடைபெறும் நிகழ்வுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

உக்ரைன் பிரச்னையால் நேச நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, அப்பகுதியில் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் என நேட்டோ அமைப்பைச் சேர்ந்த 28 உறுப்பு நாடுகள் திங்கள்கிழமை எடுத்த முடிவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.