சீனாவின் தடையை மீறி பிலிப்பின்ஸ் ராணுவ விமானம் தெற்கு சீனக் கடற்பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய மணல் திட்டில் உள்ள பிலிப்பின்ஸ் ராணுவ வீரர்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொருள்களை வழங்கியுள்ளது.
தெற்கு சீனக் கடற்பகுதியில் உள்ள ஒரு மணல் திட்டை சீனா, மலேசியா, புரூனே, வியத்நாம், பிலிப்பின்ஸ், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
இதனால் பிலிப்பின்ஸ் ராணுவத்தினர் அந்த மணல் திட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சர்ச்சைக்குரிய மணல் திட்டு பகுதிக்கு கடந்த 9-ஆம் தேதி சென்ற 2 பிலிப்பின்ஸ் கப்பல்களை சீனக் கடற்படையினர் தடுத்து நிறுத்தியதுடன் பிலிப்பின்ஸ் கப்பல்கள் அங்கு செல்வதற்குத் தடை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் அந்தத் தடையை மீறி சர்ச்சைக்குரிய மணல் திட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டதாக பிலிப்பின்ஸ் ராணுவ செய்தித் தொடர்பாளர் பீட்டர் பால் கால்வேஸ் தெரிவித்தார்.
பிலிப்பின்ஸ் ராணுவத்தின் இந்த நடவடிக்கை ஆசிய நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.