ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்க பொதுவாக்கெடுப்பு கூடாது

obamaஉக்ரைனின் கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்கான இம்மாதம் 16ஆம் தேதி பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்காக ரஷியா மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பிரதமர் ஆர்செனி யாட்சென்யூக்குடன் வாஷிங்டனில் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் ஒபாமா கூறியதாவது:

ரஷியாவுடன் கிரீமியாவை இணைப்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தும் முயற்சி சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும்.

ஸ்காட்லாந்து உள்ளிட்டப் பகுதிகளில் இத்தகைய நிலைமைகளை ரஷியா ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரத்தில் கிரீமியா பிராந்தியத்தில் ரஷியா ராணுவ ஆதிக்கம் செலுத்துகிறதா என்பது முக்கியமல்ல. அந்த நாட்டில் பொதுவாக்கெடுப்பை திணிப்பது உக்ரைனின் அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்று ஒபாமா தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பு: இதனிடையே, உக்ரைன் பிரதமர் அர்செனி யாட்சென்யூக் கூறுகையில், “”ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைனை இணைப்பதற்கான வலுவான நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில், புதிய தலைவர்கள் அடுத்த வாரம் கையெழுத்திடுவார்கள்” என்றார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறுகையில், “”ஐரோப்பிய யூனியன் மாநாடு இம்மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த மாநாட்டின்போது, ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைனை இணைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்” என்றார்.

கிரீமியாவில் ராணுவம்-ரஷியா ஒப்புதல்: ரஷியா வானொலியில், முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளின் உறவுகளுக்கான டூமாஸ் குழுத் தலைவரும், அந்நாட்டின் மூத்த எம்.பி.யுமான லியோனிட் ஸ்லட்ஸ்கி கூறுகையில், “”உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதற்காக ரஷிய ராணுவப் படையின் சில பிரிவுகள் கிரீமியா தன்னாட்சிப் பகுதியைக் கைப்பற்றியது” என்றார்.

இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் 3 பகுதிகளில் ரஷியாவின் பீரங்கிப்படை மற்றும் காலாட்படை வீரர்கள், ஆயிரக்கணக்கான துணை நிலை ராணுவ வீரர்கள் களப் பயிற்சில் வியாழக்கிழமை ஈடுபட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னணி: உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி விலகக் கோரி 3 மாதங்களாக எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெருக்கடி முற்றியதால், யானுகோவிச் தலைநகர் கீவை விட்டு வெளியேறிவிட்டார். அவர், ரஷியாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உக்ரைனில் விரைவில் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்ப்பாளர்களால் இடைக்கால அரசு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷிய ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் வந்து கிரீமியா பிராந்தியத்தை கைப்பற்றினர். அந்த பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைக்க அதன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.