உக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி

russலண்டன், மார்ச் 15-சமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே உக்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய கிரீமியா விருப்பம் தெரிவித்தது. இதற்கான தீர்மானம் கிரீமியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கிரீமியா உக்ரைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது.

மேலும், ரஷியாவுடன் கிரீமியா இணைவதற்கான பொதுவாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், லண்டனில் இன்று உக்ரைன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் ஆறு மணிநேரம் வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் தரப்பில் இருந்து கிரீமியாவின் சமரசத்திற்கு அதிகபட்ச ஆட்சி அதிகாரம், ரஷ்யர்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து பல யோசனைகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் உக்ரைன் விவகாரத்தில் இருநாடுகளிடமும் பொதுவான பார்வை இல்லை என ரஷ்யா மறுத்துவிட்டது. மேலும், பொதுவாக்கெடுப்பு முடியும் வரை இவ்விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க ரஷ்யா விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி, “அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கிரீமியாவின் பொதுவாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ளாது. அவ்வாறு நடத்துவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது” என்று கூறினார்.