கிரீமியா குறித்து ஐ.நா.தீர்மானம்: வீட்டோ மூலம் நிராகரித்தது ரஷியா

Crimea-mapகிரீமியாவை ரஷியாவுடன் இணைப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துவது செல்லாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா சனிக்கிழமை கொண்டு வந்த தீர்மானத்தை ரஷியா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது.

உக்ரைனில் உள்ள கிரீமியாவை ரஷியாவுடன் இணைப்பது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் பொது வாக்கெடுப்பு நடத்துவதை செல்லாது என்று அறிவிப்பதற்காக  ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா சனிக்கிழமை தீர்மானம் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. சீனா இதில் பங்கேற்கவில்லை.

அமெரிக்காவின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐ.நா.வுக்கான அமெரிக்கா தூதர் சமந்தா பவர், டுவிட்டர் வலைத் தளத்தில் கூறியபோது, “”இந்தத் தீர்மானம் வீட்டோ அதிகாரத்தால் நிராகரிக்கப்பட்டிருப்பதன் மூலம் கிரீமியா விவகாரத்தில் ரஷியாவின் தலையீட்டையும் மேலாதிக்கத்தையும் உலக நாடுகள் தற்போது அறிந்து கொண்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

2 பேர் பலி: இதனிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கீவ் நகரில் உள்ள ஸ்வோபோடா மத்திய சதுக்கத்தில் உக்ரைனுக்கு எதிராக ரஷிய ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காரில் வந்த உக்ரைன் ஆதரவாளர்கள் அவர்கள்  மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்குள்ள உக்ரைன் ஆதரவாளர்களின் தலைமையகக் கட்டடத்திற்கு சென்றனர்.

அந்தக் கட்டடத்தை ரஷிய ஆதரவாளர்கள் தாக்க முயன்றபோது உக்ரைன் ஆதரவாளர்கள் மீண்டும் துப்பாக்கியால் சுட்டதில் ரஷிய ஆதரவாளர் ஒருவரும், வழிப்போக்கர் ஒருவரும் உயிரிழந்தனர்.