நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, தனது சொத்தாக இரண்டு செல்போன்களை மட்டுமே வைத்திருப்பதாக அவரது செயலாளர் வசந்தா கௌதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் சுஷில் கொய்ராலாவிற்கு சொத்து என்று எதுவும் இல்லாததால் சொத்து விபரப் படிவத்தில் எதைக் குறிப்பிடுவது என்ற குழப்பத்தை அந்நாட்டு அதிகாரிகள் எதிர்நோக்கி உள்ளனர்.
இதுகுறித்து காத்மாண்டுவில் பிடிஐ செய்தியாளரிடம் நேற்று கருத்து தெரிவித்த வசந்தா கௌதம்,
சுஷில் கொய்ராலாவுக்கு என்று சொந்தமாக வீடோ, நிலமோ, காரோ, இருசக்கர வாகனமோ எதுவும் இல்லை. அவர் எந்த நிறுவனத்திலும் முதலீடும் செய்யவில்லை. கொய்ராலாவுக்கு என்று வங்கிக் கணக்கு கூட இல்லை.
அவருக்குச் சொந்தமாக 2 செல்போன்கள் மட்டுமே உள்ளன.
சொத்து விபரப் படிவத்தில் செல்போன்களை சொத்தாக குறிப்பிட முடியாது.
எனவே சொத்து விபரப் படிவத்தில் கொய்ராலாவுக்கு சொத்து ஏதும் இல்லை என்று குறிப்பிட உள்ளோம்.
அந்தப் படிவத்தில் கொய்ராலாவின் சொந்த விபரங்கள் மட்டும் இடம் பெறும் என்றார்.
மிகவும் எளிய மனிதராக அறியப்பட்ட கொய்ராலா, பலுவட்டர் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் குடிபெயர்ந்தார். அதற்கு முன்னர் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் சார்பில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் கொய்ராலா தங்கியிருந்தார்.