முன்னர் ஐக்கிய சோவியத் குடியரசின் ஒரு பகுதியாக இருந்து, பிரிந்து, தற்போது உக்ரைனின் ஒரு பகுதியாக உள்ள கிரிமியா ரஷ்யாவுடன் மீண்டும் இணைய முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் மறுத்து வரும் அதே வேளையில் இந்தத் திட்டத்திற்கு ரஷ்யா ஆதரவு அளித்தது. கிரிமியாவின் பெரும்பான்மை மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கான ஆதரவைத் தெரிவித்துள்ளதால் இதுகுறித்து பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நடைபெற்ற வாக்கெடுப்பில் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக 96.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிரிமியா பிரதமர் மிக்காயில் மலேய்ஷெவ் பேசுகையில், “ரஷ்யாவுடன் இணைவதற்காக கிரிமியா நாட்டினர் 96.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஆனால் மேற்கத்திய நாடுகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன. மேலும் அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.
கிரிமியா சட்ட வல்லுநர்கள் இருநாடுகளின் இணைப்பு குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கு செல்ல இருப்பதாகவும் அவர் தனது வலைத்தளத்தில் தெரிவித்தள்ளார்.
அப்பகுதியில் ரஷ்யாவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதை அடுத்து ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை அங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஸ்டிரில்கோவ் கிராமப்புற பகுதியிலிருந்த துருப்புகள் வாபஸ் பெறப்பட்டாலும், அங்குள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலை இன்னும் ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.