உக்ரைனில் இருந்து கிரீமியா சுதந்திரம் பெற்று விட்டதாகவும், இனி ரஷியாவுடன் இணைந்துவிட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது.
கிரிமீயாவில் உள்ள உக்ரைன் அரசின் அனைத்துச் சொத்துக்களும் தேசியமயமாக்கப்படும் என்று அறிவித்துள்ள நாடாளுமன்றம், தனிக்குடியரசாகியுள்ள கிரிமீயாவை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும்படி ஐ.நா. மற்றும் உலகின் அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், கிரிமீயா குடியரசை ரஷியாவின் உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்ளும்படி அதற்கான விண்ணப்பத்தையும் நாடாளுமன்றம் அனுப்பியுள்ளது.
அவசர ஆலோசனை: கிரிமீயா தன்னாட்சிப் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்கு ஆதரவாக கிரீமியாவின் 97 சதவீத மக்கள் வாக்களித்துள்ளதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிரீமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு குறித்து தேர்தல் ஆணையத் தலைவர் மிகாயில் மாலிஷெவ் திங்கள்கிழமை கூறுகையில், “”கிரிமீயாவில் எவ்வித புகாருமின்றி அமைதியான முறையில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 96.8 சதவீதம் பேர் உக்ரைனில் இருந்து கிரிமீயா பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்” என்றார்.
ஆனால், உக்ரைனின் புதிய ஆட்சியாளர்கள் கூறுகையில், “”கிரிமீயாவில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு துப்பாக்கி முனையில் ரஷியா அரங்கேற்றிய நாடகம்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒபாமா எச்சரிக்கை: கிரிமீயாவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்ற பிறகு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, “”இந்த பொதுவாக்கெடுப்பை சர்வதேச சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இது உக்ரைனின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் மட்டுமல்ல, ரஷிய ராணுவத்தின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட நிகழ்வாகும்” என்று தெரிவித்தார்.
பொருளாதாரத் தடை: வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், “”ரஷியாவின் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய நட்புநாடுகளுடன் இணைந்து அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருகிறோம்” என்றார்.
ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வரும் ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உள்ள நாடுகள், ரஷியாவின் செயல் சர்வதேச சட்டத்துக்குப் புறம்பானது என்று கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ரஷியாவுக்கு எதிராக 3 நிலைகளில் தடைவிதிக்க இம்மாதம் 6ஆம் தேதி ஒப்புக்கொண்ட இந்த அமைப்பின் தலைவர்கள், ரஷியா பேச்சுவார்த்தை நடத்தும் என்ற நம்பிக்கையில் அதனை நிறுத்திவைத்திருந்தனர்.
தற்போது பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதால், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் ரஷியாவுக்கு பயணம் செய்தல், வர்த்தகப் பரிமாற்றம் மற்றும் பொருளாதார உதவி உள்ளிட்டவைகளுக்கு தடைவிதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் எதிர்ப்பு: இது குறித்து ஜப்பான் தலைமை அமைச்சரவை செயலர் யோஷிஹைடே சுகா கூறுகையில், “”எங்கள் நாடு இந்த வாக்கெடுப்பை ஒப்புக்கொள்ளாது. உக்ரைனின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி கிரிமீயாவை ரஷியா இணைக்கக்கூடாது என்பதை ஜப்பான் உறுதியாக வலியுறுத்துகிறது” என்றார்.