239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானம், வெடித்து சிதறவில்லை, மோதவும் இல்லை என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் களத்தில் உள்ளன. கடைசியாக வெளியான தகவல், கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் பாதையில் இருந்து அந்த விமானம் திரும்பி, ரேடார் திரையில் இருந்து மறையும் விதத்தில், ‘டெர்ரெயின் மாஸ்கிங்’ என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 5 ஆயிரம் அடிக்கும் தாழ்வாக செலுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.
விமானப் போக்குவரத்தில் நிபுணத்துவம் படைத்த ஒரு நபரே இதை செய்திருக்க முடியும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மலேசிய விமானம் வெடித்துச் சிதறியதாகவோ, மோதியதாகவோ தகவல் இல்லை என்று வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு, ஐ.நா.வின் ஆதரவுடன் செயல்படுகிற ‘சி.டி.பி.டி.ஓ.’ என்னும் முழுமையான அணு சோதனை தடை உடன்பாட்டு அமைப்பு கூறி உள்ளது.
இதை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
காணாமல் போன மலேசிய விமானம் வெடித்து சிதறியதாகவோ, தரையிலோ தண்ணீரிலோ மோதியதாகவோ கண்டறியப்படவில்லை என வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற முழுமையான அணு சோதனை தடை உடன்பாட்டு நிறுவனம் உறுதி செய்துள்ளது என்றார்.
மேலும், “தனிப்பட்ட சூழல்களின் அடிப்படையில், சி.டி.பி.டி.ஓ.வின் சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் மூலமாக விமான விபத்துக்கள் 3 அல்லது 4 தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படலாம்.
அணு குண்டு சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக, ‘சி.டி.பி. டி.ஓ. நெட்வொர்க்’கில் அணு குண்டு வெடிப்புகளையும், பூகம்பங்களையும் கண்டறிவதற்கு உலகமெங்கும் மிகவும் ஆற்றல் வாய்ந்த சென்சார்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
அணு குண்டு வெடிப்புகளை கண்டுபிடிக்க இந்த அமைப்பை நிறுவி இருந்தாலும், பெரிய விமானங்கள் வெடித்துச் சிதறுவதையும், தண்ணீரிலோ தரையிலோ மோதுவதையும் கூட இது கண்டுபிடிக்கும்” எனவும் ஸ்டீபன் துஜாரீக் தெரிவித்தார்.
மலாக்கா ஜலசந்தியில் சூட்கேஸ்கள் மிதக்கின்றன
இதேவேளை, விமானம் மலாக்கா ஜலசந்தியில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து மலாக்கா ஜலசந்தியில் ஏதாவது மிதந்து வருகிறதா என்பதை பார்க்க கப்பல் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
அந்த கப்பல் ஜலசந்தியில் சூட்கேஸ்கள் மிதப்பதை கண்டுள்ளது. இதையடுத்து சூயஸ் கால்வாய் நோக்கி சென்ற எல்கா ஏதினா என்ற படகு நிறைய பொருட்கள் மலாக்கா ஜலசந்தியில் மதிப்பதாக இந்தோனேசிய அதிகாரிகளுக்கு ரேடியோ மூலம் தகவல் கொடுத்தது.
இந்த பொருட்கள் மாயமான விமானத்தில் பயணித்தவர்களுடையதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.