பீஜிங், மார்ச். 20- திபெத்தைச் சேர்ந்த மஸ்டிப் இன நாய்க்குட்டி ஒன்று சமீபத்தில் சீனாவில் 2 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது. உலகளவில் ஒரு நாய்க்கு அளிக்கப்பட்டுள்ள அதிகப்படியான விலை இதுவென்று கூறப்படுகின்றது.
80 செ.மீ உயரமும் 90 கிலோ எடையும் கொண்ட இந்தக் குட்டியை ரியல் எஸ்டேட் வர்த்தகர் ஒருவர் தனது சொந்த உபயோகத்திற்காக வாங்கியுள்ளார்.கடந்த 2011 ஆம் ஆண்டில் சீனாவில் 10 மில்லியன் யுவானுக்கு விற்கப்பட்ட பிக் ஸ்ப்ளாஷ் என்ற பெயர் கொண்ட சிவப்பு நிற மஸ்டிப் நாயே இதுவரை விற்பனை விலையில் முதலிடத்தைப் பெற்றிருந்தது.
இதனை சீனாவின் வடக்குப் பகுதியில் நிலக்கரி சுரங்கம் வைத்திருந்த ஒருவர் வாங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.இவற்றிலும் சிவப்பு மற்றும் சிங்கத்தினை ஒத்த தங்க நிற பிடரி மயிர்களுடன் இருப்பவை அரிய வகையாகக் கருதப்படுவதால் அவற்றின் விலை மிகவும் அதிகம் என்று இவற்றின் விற்பனையாளர் தெரிவிக்கின்றார்.தூய திபெத்திய ரகம் பாண்டாக்கள் போல அரிதாகக் காணப்படுவதால் அவற்றின் விலையும் அதிகமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய ஆசியா மற்றும் திபெத் பகுதிகளில் வாழ்ந்துவந்த நாடோடிப் பழங்குடி மக்கள் வேட்டைக்காகப் பயன்படுத்திவந்த நாய்களின் வம்சாவளியைச் சேர்ந்த இந்த மஸ்டிப் ரகங்கள் விசுவாசமானவையாகவும், மிகுந்த பாதுகாப்பை அளிப்பவையாகவும் இருப்பவை என்று தெரிவிக்கப்படுகின்றது.ஓநாய், சிறுத்தை போன்றவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு இவற்றிற்கு திறன் இருப்பதாகக் கூறப்படுகின்றது.சீனர்களில் சிலர் இந்த வகை நாய்கள் புனிதமானவை என்றும் உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் வளத்தை அளிக்க வல்லவை என்றும் நம்புகின்றனர்.
கடந்த வருடம் சீனாவின் வனவிலங்குப் பூங்கா ஒன்றில் மஸ்டிப் ரக நாய் ஒன்றை சிங்கம் போல் பார்வையாளர்களுக்குக் காட்டியது பின்னர் அதிகாரிகளால் கண்டனம் செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.