இஸ்லாமாபாத், கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக ரத்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாத இயக்கத்தினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்துகொள்ள பாகிஸ்தான் அரசு முன்வந்தது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை எந்தவித முடிவும் இல்லாமல் மறுமுறை தொடங்கியது.
அப்போது, தலிபான் இயக்கத்தினர் தாங்கள் சிறைப்பிடித்திருந்த துணை ராணுவத்தினரைக் கொன்றதை வீடியோக் காட்சிகளாக வெளியிட்டதை அடுத்து பேச்சுவார்த்தை முறிந்துபோனது. தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் அரசு வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது. அதன்பின்னர் தலிபான் இயக்கம் போர்நிறுத்தத்தை அறிவிக்க அரசும் தங்களது தாக்குதல்களைக் கைவிட்டது.
தடைப்பட்ட பேச்சுவார்த்தைகளை நேரடியாகத் தொடர முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான இடம் இன்னும் 48 மணி நேரத்திற்குள் முடிவு செய்யப்படும் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான் இன்று காலை தெரிவித்தார். ஹபிபுல்லா குஷ்க், ஃபவாத் ஹசன் ஃபவாத், அர்பாப் ஆரிப், ருஸ்தம் ஷா மொஹ்மன் ஆகியோர் அடங்கிய புதிய குழு நேற்று அமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதை இறுதி செய்ததாக சர்வதேச செய்தி தகவல்கள் வெளிவந்துள்ளன.
எளிதில் அணுகக்கூடிய இடத்தில் பேச்சுவார்த்தையை நடத்த முடிவு செய்த அரசு கைபர் பக்துன்க்வாவின் மிரான்ஷா பகுதியில் உள்ள பன்னு விமான விமானநிலையப் பகுதியை தேர்ந்தெடுத்துள்ளது. தலிபான் இயக்கமோ வடக்கு வரிசிஸ்தான் பகுதியில் பேச்சுவார்த்தையை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையின்போது தலிபான் இயக்கத்தை தனித்திருக்கச் செய்துவிட்டு பாகிஸ்தானில் ஒழுங்கு, அமைதியைப் பராமரிக்க விரும்பாத மற்ற குழுக்கள் அடையாளம் காணப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.