ஐயோ, நம்புங்கள்: நஜிப் சொன்னதைச் செய்வாராம்!

micமஇகாவின் உதவித் தலைவர் எஸ். சோதிநாதன் இந்தியர்கள் பார்சான் நேசனலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசாங்கத்திலிருந்து பணி ஓய்வு பெற்றவர்கள் அமைப்பு உறுப்பினர்களுடன் நடத்திய ஒரு சந்திப்பில் கூறியதாக நேற்றைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறுகிறார்.

அதிகமான இந்தியர்கள் அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று நஜிப் வாக்குறுதியளித்துள்ளார் என்று சோதிநாதன் கூறினார்.

“அரசாங்கத்துறையில் 7.5 விழுக்காடு வேலைகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் என்று நஜிப் நமக்கு உறுதியளித்துள்ளார்”, என்றார் சோதிநாதன்.

இது போன்ற ஒரு மாபெரும் செய்தி தமக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்கிறார் குலசேகரன்.

இவ்வளவு பெரிய தகவலை வெளியிட்ட சோதிநாதனிடம் இரு கேள்விகளை கேட்கிறேன்: 1. பிரதமர் உண்மையிலேயே அவ்வாறான வாக்குறுதியை அளித்திருந்தால், அதை பிரதமரே ஏன் அறிவிக்கவில்லை? 2. அந்த இலக்கை அடைய எவ்வளவு காலம் பிடிக்கும், இன்னும் 20 ஆண்டுகளா?

பிஎன் அரசாங்கம் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்தியர்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. இருந்தும், இந்தியர்களின் கோரிக்கையான 7.5 விழுக்காடு அரசாங்க வேலைவாய்ப்புகளை ஏன் அரசாங்கம் இன்னும் அமல்படுத்தவில்லை என்று சோதிநாதன் இந்திய சமூகத்தித்திடம் தெளிவாக, உடனடியாகக் கூறுவாரா?

அக்டோபர் 19, 2009 இல் பகான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு முதல்வருமான லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்த கேள்விக்கு பிரதமர்துறை துணை அமைச்சர் லியு வுய் கியோங் அளித்த பதிலில் செப்டெம்பர் 31, 2009 ஆண்டில் இருந்த மொத்த அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 1, 222, 947; இதில் மலாய்க்காரர்கள் 76.2 விழுக்காடு, சீனர்கள் 6 விழுக்காடு, இந்தியர்கள் 4.1 விழுக்காடு, மற்றவர்கள் 13.7 விழுக்காடு என்று கூறியிருந்தார்.

இதற்கு முன்பாக, 2007 ஆம் ஆண்டில் தாம் வெளியிட்ட அறிக்கையில் 1971 ஆண்டிற்கான அரசாங்க புள்ளிவிபரப்படி அரசு சேவையில் 17.4 விழுக்காடு இந்தியர்கள் இருந்திருக்கின்றனர் என்று குலசேகரன் சுட்டிக் காட்டுகிறார்.

ஆக, பாரிசான் ஆட்சியில் அரசாங்கத்தில் பணியாற்றிய இந்தியர்களின் எண்ணிக்கை வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. இருந்தும், வெட்கமில்லாமல் சோதிநாதன் இதனை வைத்து காஜாங் இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார்.

நஜிப்பும் மஇகா தலைவர்களும் “நம்பிக்கை” குறித்து இனிமேலும் பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டனர். பிஎன்னுக்கும் மஇகாவுக்கும் இந்திய சமூகம் அளித்திருந்த அரசியல் அதிகாரம் மற்றும் நம்பிக்கைக்கு அவர்கள் துரோகம் செய்து விட்டனர் என்று குலா கூறுகிறார்.

ஹிண்ட்ராப்பும் இந்திய சமூகத்திற்கு துரோகம் செய்து விட்டது. 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக பாரிசானுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்னர் அவர்கள் பிஎன்னுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால், பிஎன் புரிந்த மிகப் பெரிய துரோகத்தின் விளைவாக ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி துணை அமைச்சர் பதவியை துறக்க வேண்டியதாயிற்று என்று குலசேகரன் பிஎன்னின் துரோகச் செயல்களை சுட்டிக் காட்டினார்.

பாரிசான் அரசாங்கத்தால் இந்தியர்கள் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட முறை அது ஒரு நம்ப முடியாத அரசாங்கம் என்பதைக் காட்டுகிறது என்று கூறிய குலசேகரன், காஜாங் இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் அவர்களின் முழு ஆதரவையும் வான் அசிசாவுக்கு அளிக்க வேண்டும் என்றார்.

வான் அசிசாவின் மாபெரும் வெற்றி அன்வாருக்கும் கர்பால் சிங்குக்கும் எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பாக இருக்க வேண்டும் என்றாரவர்.

TAGS: