உக்ரைனின் கிழக்குப் பகுதி மீது எவ்வித ராணுவ நடவடிக்கையையும் ரஷியா மேற்கொள்ளாது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகலிடம் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி வியாழக்கிழமை கூறியதாவது:
அமெரிக்க மற்றும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் தொலைபேசியில் உக்ரைன் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஒரு மணி நேரம் விவாதித்தனர். அப்போது, கிரீமியா மீதான ரஷிய ராணுவ நடவடிக்கை குறித்து ஹேகல் கவலை தெரிவித்தார். உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லையில் ரஷியப் படைகள் நிலை கொண்டுள்ளதன் நோக்கங்கள் குறித்து ஷோய்குவிடம் விளக்கினார்.
பேச்சுவார்த்தைக்கு சம்மதம்: அதைத்தொடர்ந்து ஷோய்கு, மேற்கண்ட எல்லையில் ரஷியப் படைகள் பயிற்சி மட்டுமே மேற்கொண்டுள்ளன. எந்த விதத்திலும் உக்ரைனில் ஊடுவும் எண்ணம் இல்லை. அதன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை எடுக்காது என்று ஹேகலிடம் உறுதியளித்தார் என்று ஜான் கிர்பி தெரிவித்தார்.
கிழக்கு உக்ரைனில் பதற்றம்: இதனிடையே, ரஷிய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷியர்களுக்கு விசா தடை விதிக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் ரஷியப்படை அங்கு ஊடுருவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மிகாயிலோ ஸ்டெபானோவ் என்பவர் கூறுகையில், “”நாங்கள் வெறும் பையுடன் இங்கு தங்கியுள்ளோம். அதிகாரிகளின் நடவடிக்கை வெறுப்பூட்டுகிறது. சொந்த நாட்டு மக்களுக்கே உக்ரைன் அரசு தீங்கிழைக்க முயற்சிக்கிறது. இதற்கு ரஷியா பதிலடி கொடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.
அமெரிக்கா நம்பிக்கை: “”ரஷியாவுக்கு எதிராக அதிபர் ஒபாமா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடை, அந்நாட்டுக்கு மட்டுமின்றி உலகளவிலும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்மூலம், உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வரவும், இப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் வாய்ப்புள்ளது” என்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி நம்பிக்கை தெரிவித்தார்.