அரபு நாடுகளுக்கு முன்மாதிரி நகரம் என்ற பாராட்டைப் பெற்றிருந்த பாக்தாத் நகரம், குற்றங்கள் அதிகம் நிகழும் மோசமான நகரமாக மாறிவிட்டது என்று விமர்சிக்கப்படுகிறது.
உலகின் 239 நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியதாகக் கூறும் மெர்சர் கன்சல்டிங் என்ற நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது: அரசியல் நிலைத்தன்மை, குற்றங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாக்தாதில் தீவிரவாதிகளின் தாக்குதல், கடுமையான மின் தட்டுப்பாடு, குடிநீர்த் தட்டுப்பாடு, மோசமான நிலையில் கழிவுநீர் அமைப்புகள், ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை தினந்தோறும் சந்திப்பதாக ஆய்வின்போது பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாக்தாதில் செய்தித் தாள் விற்கும் ஹமீது என்பவர் கூறுகையில், “செல்வந்தராக இருந்தாலும் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்ற பீதியிலேயே இருக்கிறார்கள். மரணம் எந்த நேரத்திலும் வரும் என்ற அச்சத்துடனே நாங்கள் வாழ்ந்து வருகிறோம்’ என்று கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.