நைஜீரியாவில் குழந்தைத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

pregnant_girls_001நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் பெருகிவரும் குழந்தைத் தொழிற்சாலைகளை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டுக் காவல்துறையினர் கண்டுபிடித்து அங்கிருக்கும் பெண்களை விடுவித்து வருகின்றனர்.

இதன்மூலம் மனிதக் கடத்தல், சட்டவிரோத மகப்பேறு மருத்துவமனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குழந்தை விற்பனையில் கிடைக்கும் ஒரு பங்கு பணத்துக்கு ஆசைப்பட்டு 20க்கும் குறைவான வயதுடைய பல பெண்கள் இத்தகைய இடங்களிலேயே தங்கி குழந்தை விற்பனையில் ஈடுபடுகின்றனர். இத்தகைய குழந்தைகளைப் பெரும்பாலும் குழந்தைப்பேறு இல்லாத பெற்றோர்கள் வாங்குகின்றனர். அதிலும் ஆண் குழந்தைகளுக்கு அதிக விலை கொடுக்கப்படுகின்றது.

இதுதவிர, தோட்டங்கள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள் அல்லது வீட்டு உதவிக்கென சிறுவர்களை வாங்கிச் செல்வது மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாக உள்ளது. சிலர் விபச்சாரத்திற்கும் விற்கப்படுகின்றனர். வெகு சிலரே துன்புறுத்தப்படுவதாகவும் மற்றும் சிலர் மாந்த்ரீக சடங்குகளில் பலியிடப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு நைஜீரியாவில் அதிகரித்துக் காணப்படும் இத்தகைய குழந்தைத் தொழிற்சாலையின் ஒரு பிரிவு நேற்று தென்மேற்கு நைஜீரியாவில் முதன்முதலாக லாகோசின் அருகே ஒரு வீட்டில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புலனாய்வு அறிக்கையைத் தொடர்ந்து ஒகுன் மாநிலத்தின் அகுடே மாவட்டத்தில் இந்த சோதனை நடைபெற்றது. அங்கே 20 வயதுக்கும் குறைவான எட்டு கர்ப்பிணிப் பெண்களும், அந்த இல்லத்தின் மேற்பார்வையாளரும் பிடிபட்டுள்ளனர். தாங்கள் பெறும் குழந்தையை விற்பதன்மூலம் தங்களுக்கு 1,800 அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என்று அந்தப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மீதான விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றம் அவர்களுக்கான தண்டனையை வழங்கும் என்று கூறிய காவல்துறை தகவல் தொடர்பாளர் அபிம்போலா ஒயேயேமி, அந்தப் பெண்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இத்துடன் இதுபோல் விடுவிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 125 என்று நைஜீரியக் காவல்துறை குறிப்பிடுகின்றது.