வட கொரியா, குறைவான தூரம் சென்று தாக்கக் கூடிய 16 ஏவுகணைகளை கடலில் ஏவி ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் வரை நடைபெற உள்ள தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 2.30 மணி வரையில் இந்தச் சோதனை நடைபெற்றது. சுமார் 60 கி.மீ தொலைவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன.
அவை ரஷியாவில் தயாரிக்கப்பட்ட, குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளாகும். இவ்வாறு ஏவுகணைச் சோதனைகளை மேற்கொள்வது வட கொரியாவுக்கு வழக்கமான ஒன்றுதான். ஆனால் கடந்த வாரங்களாக அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை அந்நாடு ஏவி வருகிறது.
சனிக்கிழமை ஏவப்பட்ட 30 ஏவுகணைகளையும் சேர்த்து, இம்மாதத்தில் மட்டும் சுமார் 70 ஏவுகணைகள் வடகொரியாவால் ஏவப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
எல்லைப் பகுதியில் தென் கொரியா-அமெரிக்கா நடத்தி வரும் இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி, படையெடுப்புக்கான பயிற்சி என்று வட கொரியா விமர்சித்திருந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென் கொரியா மற்றும் அமெரிக்கா கூறி வருகின்றன.
எதிர் காலங்களில் கருவிகளும் கருவிகளும் சண்டை போட்டுக்கொள்ளும் என்பது உண்மையாகிறது. இதில் மனிதர்களின் நிலை என்னவோ?