எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் 529 பேருக்கு மரண தண்டனை

egyptஎகிப்தில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனைகளை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் மொர்ஸிக்கு ஆதரவாக உள்ளிருப்பு போராட்டம் செய்தவர்களை பாதுகாப்பு படையினர் வன்முறையாக கலைத்ததை அடுத்து, பொலிஸ்காரர் ஒருவரைக் கொலைசெய்தது, பொலிசாரைத் தாக்கியது போன்ற காரியங்களில் இவர்கள் ஈடுபட்டதாக குற்றங்காணப்பட்டுள்ளது.

தற்போது குற்றங்காணப்பட்டுள்ளவர்களில் சுமார் 150 பேர் ஏற்கனவே தடுப்புக்காவலில் இருந்துவருகின்றனர்.

மற்றவர்கள் மீது அவர்கள் நீதிமன்றம் வராமல் அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த வேறு 16 பேர் விடுவிக்கப்பட்டுளார்கள்.

இந்த வழக்கில் பிரதிவாதி தரப்பு வாதங்களை முன்வைக்க முறையான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை என அவர்களுடைய சட்டத்தரணிகள் முறையிட்டுள்ளனர்.

கெய்ரோவுக்கு தெற்கி மின்யா என்கிற இடத்திலுள்ள நீதிமன்றத்தில், வெறும் இரண்டே அமர்வுகளில் இந்த வழக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றங்காணப்பட்டுள்ளவர்களில் முஸ்லிம் சகோதரத்துவக் குழுவின் தலைவர்கள் அடங்குவர்.

மொர்ஸி ஆதரவாளர்கள் வேறு எழுநூறு பேர் மீது வரும் செவ்வாய்க்கிழமை வழக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

எகிப்தில் மரண தண்டனை விதிக்கப்படுவது உண்டு என்றாலும், மிகவும் அரிதாகவே அவை நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. -BBC