உக்ரைன் எல்லையில் ரஷியப் படைகள் குவிப்பு: நேட்டோ

ukraine_russiaஉக்ரைன் எல்லையில் ரஷியா படைகளை குவித்து வருவதாக “நேட்டோ’ படையின் முக்கிய தளபதி பிலிப் ப்ரீட்லவ் தெரிவித்துள்ளார். மேலும், ரஷிய ஆதரவாளர்கள் அங்கு ஊடுருவலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க சிந்தனையாளர்களும், ஐரோப்பிய நிதியமைப்பும் இணைந்து உக்ரைன் பிரச்னை குறித்து பிரஸ்ஸல்ஸில் நடத்திய கருத்தரங்கில் பிலிப் ப்ரீட்லவ் பேசுகையில், “”உக்ரைனின் கிழக்குப் பகுதியை கைப்பற்றுவதற்கு ரஷியப் படை மிகவும் ஆயத்தமாகி வருகிறது. அந்நாட்டின் படைகள் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான போர்ப் பயிற்சிகள் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறேன். ஏற்கெனவே, இதேபோல் படைகளை குவித்து பயிற்சி மேற்கொண்டுதான் கிரீமியாவுக்குள் ரஷியா நுழைந்தது அனைவரும் அறிவோம். தற்போது, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஊடுருவும் திட்டத்துடன் படைகளை ரஷியா நிறுத்தியுள்ளது” என்றார்.

உக்ரைனின் புதிய படைத்தளம் ரஷியாவின் வசம்: இந்நிலையில், கிரீமியாவுக்கான உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஃபேஸ் புக்கில் திங்கள்கிழமை செய்துள்ள பதிவில், “”ரஷியப் படைகள் ஆயுதங்களுடன் உக்ரைனின் ஃபியோடோசியா கடற்படைத் தளத்துக்குள் கையெறி குண்டுகளை வீசியபடி திங்கள்கிழமை அதிகாலை புகுந்தது. கடற்படைத்தளத்தை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து 3 ரஷிய வாகனங்கள் வெளியேறின. அவற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உக்ரைன் கடற்படை வீரர்கள் இருந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரீமியாவை தனது நாட்டுடன் இணைத்துக்கொண்ட பிறகு கடந்த சனிக்கிழமை உக்ரைனின் பெல்பெக் விமானப்படைத்தளத்தை ரஷியப்படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கிரீமியாவில் மின்தடை: உக்ரரைனின் தன்னாட்சிப் பிராந்தியமான கிரீமியா, ரஷியா வசமான நிலையில், அந்தப் பிராந்தியத்தில் மின்தடை நிலவி வருகிறது.

முக்கிய நகரான சிம்ஃபெரோபோல், மத்தியப் பகுதியான கார்லா மர்க்சாவில் வீதிகள் இருளில் மூழ்கின.

உக்ரைனில் இருந்துதான் கிரீமியாவுக்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புதின்-மெர்க்கல் பேச்சு: இதனிடையே, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் தொலைபேசியில் பேசினர். அப்போது, ரஷியாவுடன் கிரீமியா இணைந்தது குறித்து விவாதித்தனர். மேலும், உக்ரைனின் நிகழ்வுகளை பார்வையிட ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.எஸ்.சி.இ) அங்கு நிறுத்தப்படுவது குறித்த ஒப்பந்தத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்ததாக கிரெம்ளின் மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.