ரஷ்யாவுடன் கிரிமீயா மாகாணம் இணைந்துள்ளதால் அங்கிருந்த தங்கள் நாட்டு வீரர்களை உக்ரைன் வாபஸ் பெற்றுள்ளது.
சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு தனிநாடான உக்ரைன் பெருளாதார நெருக்கடிகளை சந்தித்து வந்தது.
இப்பிரச்சனையினால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை இணைக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்திய போதிலும் இதற்கு உடன்படாமல், ஜனாதிபதி யானுகோவிச் இருந்துள்ளார்.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் யானுகோவிச் தலைமறைவானார், இதனை தொடர்ந்து கிரிமீயா மக்கள் தங்கள் மாகாணத்தை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தனர்.
இதற்கான வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைய ஆதரவு தெரிவித்ததால், கடந்த 17ம் திகதி முதல் ரஷ்யாவுடன் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கிரிமீயாவில் உள்ள தங்கள் நாட்டு படைகள் உடனே வெளியேறுமாறு உக்ரைன் உத்தரவிட்டுள்ளது, மேலும் இவர்களுக்கான இருப்பிடங்களை ஏற்பாடு செய்யும் பணியும் நடக்கிறது.
இதுகுறித்து உக்ரைன் நாட்டு பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஆன்ட்ரி பருபி, கிரிமீயா மட்டுமல்ல ஒட்டுமொத்த உக்ரைனையும் ஆக்ரமிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்றும், இதனால் எந்த நேரமும் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.