ரஷ்யா பலத்திற்கு மாறாக பலவீனமான திசையில் பயணிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் விடயத்திலும் ரஷ்யா சர்வதேச நாடுகளுக்கு முரணான வகையில் செயற்படுவதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் பட்சத்தில் மேலும் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
க்ரைமியா பிராந்திய விவகாரம் தொடர்பில் ரஷ்யா மீது ஏற்கனவே பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா க்ரைமியா பகுதியில் அதிகளவிலான ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்குள் யுக்ரேனின் கட்டுப்பாட்டிலிருந்த க்ரைமிய கடற்படைத் தளம் மற்றும் இராணுவ முகாம்களையும் ரஷ்ய படையினர் கைப்பற்றியிருந்தனர்.
இது தொடர்பிலும் அமெரிக்க ஜனாதிபதி உலக தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறவுள்ள ஜி-8 மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.