பொதுவாக்கெடுப்பு நடத்தி கிரீமியாவை ரஷியாவுடன் இணைத்தது சட்டவிரோதம் என்று ஐ.நா. பொது சபையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா.பொது சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில் 100 நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 11 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் புறக்கணித்தன.
கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி உக்ரைனின் கிரீமியாவை ரஷியாவுடன் இணைப்பதற்காக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு செல்லாது என்றும், கிரீமியாவில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க முடியாது. அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் கூறுகையில், “” உக்ரைன் நாட்டைப் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த 16 ஆம் தேதி ரஷியாவுடன் கிரீமியாவை இணைப்பதற்காக பொது வாக்கெடுப்பு நடத்துவது செல்லாது என்று ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. சீனா புறக்கணித்தது. இருப்பினும் ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்தது.