உலகம் முழுவதும் மரண தண்டனை நிறைவேற்றம் 15% அதிகரிப்பு

death_penaltyகடந்த 2013ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக “ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ என்னும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பான “ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்’லின் ஆண்டறிக்கையை அந்த அமைப்பின் இயக்குநர் ஆட்ரே கௌரான், செயலர் சலீல் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டுப் பேசியதாவது:

உலக அளவில் சீனா, ஈரான், இராக், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் அதிக அளவுக்கு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 682 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு 778 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதற்கு இராக் மற்றும் ஈரான் நாடுகளில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது அதிகரித்திருப்பதே காரணமாகும். ஈரானில் கடந்த ஆண்டு மட்டும் 369 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது, 2012ஆம் ஆண்டு 314 ஆக இருந்தது. இதேபோல் இராக்கிலும் கடந்த ஆண்டு 169 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் 2012ஆம் ஆண்டில் 21 நாடுகளில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 2013ஆம் ஆண்டில் அந்த நாடுகளின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்திருக்கிறது. இந்தோனேஷியா, குவைத், நைஜீரியா மற்றும் வியத்நாம் ஆகிய நாடுகளும் கைதிகளுக்கு மரண தண்டனைகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளன.

இருப்பினும் உலக நாடுகள் அனைத்திலும் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளை ஒன்றாக சேர்க்கும்போது வரும் எண்ணிக்கையை விட சீனாவிலேயே அதிக அளவு மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் அந்த எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு மரண தண்டனை விதிக்கப்படுவது மற்றும் அதனை நிறைவேற்றுவதை சீனா மிகவும் ரகசியமாக வைத்திருப்பதே முக்கிய காரணமாகும்.

2007ஆம் ஆண்டு முதல் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது குறைந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது உண்மையென்றால், அந்த தகவல்களை சீன அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்று “ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.