உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஒபாமாவுடன் புதின் அவசர ஆலோசனை

putinobamaரியாத், மார்ச் 29- ஒரு நாள் பயணமாக சவூதி அரேபியாவுக்கு சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டங்கள் குறித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

உக்ரைனின் நிலைத்த தன்மையை உறுதி செய்வது தொடர்பான சர்வதேச நாடுகள் வழங்க வேண்டிய பங்களிப்பு தொடர்பாக ஒபாமாவுடன் பேசிய புதின், இது தொடர்பாக மேற்கொண்டு பேச விரும்புவதாக ஒபாமாவிடம் உறுதி அளித்தார்.

உக்ரைன் விவகாரத்துக்கு ராஜதந்திர ரீதியாக தீர்வு காண்பது தொடர்பாக ரஷ்யா தனது செயல் திட்டத்தை எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று புதினிடம் ஒபாமா கேட்டுக் கொண்டார்.

’ஜி 8’ நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள ரஷ்யா, அந்த சரிவை சமாளிக்க திணறிவரும் நிலையில், ஒபாமாவுடன் இன்று புதின் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

உக்ரைனில் இனி ராணுவ நடவடிக்கையில் ரஷியா ஈடுபடாது: பான் கி-மூன்

ban kee moonநியூ யார்க், மார்ச் 29- உக்ரைனில் இனி எவ்வித ராணுவ நடவடிக்கையிலும் ரஷியா ஈடுபடாது என்று ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டிலிருந்து சமீபத்தில் கிரிமியாவை தனியாக பிரித்து தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷியா, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை ஆக்கிரமிக்காது என்று புதின் உத்திரவாதம் அளித்துள்ளாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பான் கி-மூன் கூறியதாவது:-

உக்ரைனில் இனி எவ்வித ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்று என்னிடம் கூறிய புதின், எல்லைப்பகுதியில் மதவாத சக்திகளின் நடமாட்டம் குறித்து கவலை தெரிவித்தார். உக்ரைன் விவகாரத்தால் உண்ர்ச்சி கொந்தளிப்பும், பதற்ற நிலையும் அதிகரித்து கொண்டே வருவதை தவிர்க்க இரு நாடுகளின் தலைவர்களையும் நேருக்கு நேர் சந்தித்து பேச வைப்பதில் நான் முன்னுரிமை அளிப்பேன்.

இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனையை அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உக்ரைனுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன். மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பிரச்சனையால் சர்வதேச நாடுகள் வேறுபட்டு நிற்பது, அவசரம் மற்றும் முக்கியமான இதர பிரச்சனைகளில் பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடும்.

இதுபோன்ற அதிக பதற்றம் நிலவும் வேளைகளில் சிறு தீப்பொறி கூட மிகப்பெரிய தீப்பிழம்பாக உருமாறி, விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.