நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி: ம.இ.காவினற்கு ஒரு சவால் !

-மு. குலசேகரன், மார்ச் 29, 2014.

kula1-710712தமிழ் இடைநிலப்பள்ளி ஒன்று இந்த நாட்டில் கட்டப்பட வேண்டுமென்பது  இந்நாட்டில் உள்ள தமிழர்களின்  நெடு நாளைய வேண்டுகோள். இந்தக் கனவு  நிறைவேறினால்  இந்திய மாணவர்கள் தங்களின் கல்வியை தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளில் இருந்து  இடைநிலைப்பள்ளிகளில் அதே சூழலில் தொடர வாய்ப்பு அளிக்கும்.

 

தேசிய கல்விக் கொள்கைக்கு குந்தகம் ஏற்படாமலும் இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பு ஆகிய கூறுகளை உள்ளடக்கிய ஒரு கல்வி திட்டத்தோடு இந்திய மாணவர்கள் அங்கு பயில அது ஏதுவாக இருக்கும். இதைச் செய்வதற்கு ஜனநாயக  செயல் கட்சியும் அதன் ஆட்சியிலிருக்கும் பினாங்கு மாநிலத்தில் ஒரு நிலத்தையும் அடையாளம் கண்டுள்ளது.

 

2 வது கல்வி அமைச்சர்  இட்ரிஸ் ஜூசோ  மார்ச் 24ந் தேதி நாடாளுமன்றத்தில் கல்வி சம்பந்தப்பட்ட விவாதத்தின் போது பதிலளிக்க வந்திருந்த வேளையில் அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பினாங்கு அரசாங்கம் மத்திய அரசிடம்  விண்ணப்பித்திருந்த தமிழ் இடைநிலப்பள்ளிக்கான விவகாரத்தை அவர் முன் வைத்தேன்.  அதற்கு பதிலளித்த அவர், நாட்டில் கட்டப்படும் அனைத்து இடைநிலைப்பள்ளிகளும்  தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி பஹாச மலேசியாவை போதனா மொழியாகக் கொள்ளவேண்டும் என்று 1996 கல்விச் சட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.

 

கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி கல்வி இலாகா இயக்குனர் டாக்டர் கீர் முகமது யுசுப் பினாங்கு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில்கூட, 1996 கல்வி சட்டத்தின் கீழ் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க வகைச் செய்யப்படவில்லை என்று கூறியிருந்தார்.

 

அக்கடிதத்தில் கல்விச் சட்டத்தில் எல்லா இனத்தவரும் சேர்ந்து  பயிலும் வண்ணம் தேசிய இடைநிலை பள்ளிகள் கட்ட மட்டுமே வகைச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியிருந்தார். அப்படியென்றால், கல்வி சட்டத்தில் திருத்தம் செய்யாமல் தமிழ் இடைநிலைப் பள்ளி கட்ட வழி  இல்லை என்பது தெளிவாகின்றது.

 

கல்வி, மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால் பினாங்கு மாநிலம் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு என்று இடம்  ஒன்றை ஒதுக்கியிருந்த போதிலும் அதனைக் கட்டுவதற்கு தடங்கலாக இருப்பது மத்திய அரசு மட்டுமே.

 

எந்த ஒரு சட்டத்தையும் அதன் பெருநோக்கத்தை  முடக்காமல் நாடாளுமன்றம் வழி திருத்தம் செய்யலாம். கல்விச் சட்டத்தில் ஒரு சிறு1mic திருத்தம் கொண்டு வந்து அது நாட்டின் தேசிய கல்வி கொள்கைக்கு தடங்கலாக இல்லாவண்ணம் தமிழ்  இடைநிலைப்பள்ளி அமைய ஏற்பாடு செய்யலாம். இந்த மாற்றம் வர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ம.இ.கா அமைச்சர்கள் முன் வரவேண்டும்.

 

ஆகவே , நாடாளுமன்றத்தில் கல்விச் சட்டத்தில், நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி  ஒன்றை கட்ட வகை செய்யும் வகையில் கல்விச் சட்டத்தில்  திருத்தம் ஒன்று  கொண்டுவருமாறு ம.இ.காவினற்கு நான் சவால் விடுக்கிறேன்.

 

இதற்கான சட்ட திருத்தத்தை அமைச்சரைவுக்கு பரிந்துரை செய்யம்படி  ம.இ.கா அமைச்சர்களை கேட்டுக்கொள்கிறேன். இதை ம.இ.கா செய்தால், பாரிசான் அரசு இனியும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதைத் தவிர்க்கலாம் .

 

ஜனநாயக செயல் கட்சி கேட்பதெல்லாம் ஒரே ஒரு இடைநிலை தமிழ்ப்பள்ளியை  பட்டவர்த்திலுள்ள பாகான் டாலாமில் கட்ட அனுமதி மட்டுமே. அங்கு உள்ள மொத்த மக்கள் தொகையில்  இந்தியர்கள்  24% இருப்பதானால் தமிழ் இடைநிலைப்பள்ளி ஒன்று அங்கே அமைந்தால் அது பொறுத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

 

அதற்கான  சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமேயானால் ஜனநாயக செயல் கட்சியும்  பாக்காத்தான் கட்சியும் தங்களது  முழு ஆதரவை வழங்கும் என்பற்கு உறுதி கூறுகிறேன்.

 

ம,இ.கா இதனைத் துணிந்து செய்யுமா என்பதே இப்போதையக் கேள்வி.

நம்பிக்கை என்ற சொல்லை அடிக்கடி உபயோகிக்கும் பிரதமரும் சரி, இந்திய சமூகத்தின் நலனைப் பேணுவதில்  பாரிசான் என்றுமே சுணங்கியதில்லை என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்ளும் ம.இ.க வினரும் சரி , இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

 

1996 ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தில்  தேவையான திருத்தங்களைக்  கொண்டு வந்து நாட்டின் முதலாவது  தமிழ்  இடைநிலைப் பள்ளியை கட்ட இந்த பாரிசான் அரசு நடவடிக்கை எடுக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை  நிறைவேற்றுகிறதா என்பதையும் இது தெளிவு படுத்தும்.

 

 

 

TAGS: