ஆப்கான் தேர்தல் அலுவலகத்தை தாக்கிய தலிபான்கள்

kabulஆப்கானிய அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நிலையில், தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.

அருகில் இருக்கும் ஒரு கட்டிடத்துக்குள் ஆயுதந்தரித்த தீவிரவாதிகள் நுழைந்ததை அடுத்து, வெடிச்சத்தமும், துப்பாக்கி சத்தமும் கேட்டன.

பெண்கள் போன்று உடையணிந்த 5 ஆயுததாரிகள், தமது புர்க்காவில் தன்னியக்க துப்பாக்கிகள் மற்றும் ராக்கட் செலுத்திகள் ஆகியவற்றை மறைத்து எடுத்துச் சென்று காவலர்களை தாக்கியுள்ளனர்.

வெடிச்சத்தமும், துப்பாக்கிச் சத்தமும் நீண்ட நேரம் கேட்டன.

அனைத்து தாக்குதலாளிகளும் கடைசியில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அந்தக் வளாகத்தில் வாக்குச் சீட்டுக்களை வைத்திருந்ததாக நம்பப்படும் ஒரு கட்டிடம் எரிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு உதவிப் பணியாளர்கள் தங்கியிருந்த கட்டிடம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளான மறுதினம் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அடுத்த வாரம் நடக்கவிருக்கும் தேர்தலுக்கு இடையூறு செய்யப்போவதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

எத்தனை வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்ற விபரங்களை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக காபூலுக்கான பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். -BBC