வெனிசூலாவில் போராட்டம்: சாவு 39ஆக அதிகரிப்பு

venezuelaவெனிசூலாவில் அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அந்தப் போராட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மிக்கேல் ரோட்ரிக்ஸ் கூறியதாவது:

சான் கிறிஸ்டோபல் நகரத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் விளம்பரப் பலகை ஒன்றை பயன்படுத்தி சாலையில் தடுப்பை ஏற்படுத்த முயன்றனர். அப்போது அதிலிருந்து கம்பி ஒன்றில் சிக்கி, 44 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றொரு நகரமான மராகைபோவில், ராக்கெட் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்யும்போது 33 வயதான ஒரு நபரும் உயிரிழந்தார் என்று மிக்கேல் ரோட்ரிக்ஸ் கூறினார்.

கராகஸ் நகரத்தின் வீதிகளில் அரசு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் போராட்டங்கள் சனிக்கிழமையும் நடைபெற்றன. தனது அரசைக் கவிழ்ப்பதற்காகவே, அமெரிக்கா இத்தகைய போராட்டங்களை தூண்டிவிடுவதாக வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றங்கள் அதிகரிப்பு, பணவீக்கம், அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு ஆகிய காரணங்களால் வெனிசூலாவில் அதிபர் மதுரோவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.