புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் சர்வதேச குழு கணித்துள்ளது.
ஆனால் ஏற்படக்கூடிய மாற்றங்களில் பலவற்றுக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியும் என்றும், கரிமம் சுற்றாடலில் கலந்துவருவதை நாம் வேகமாக கட்டுப்படுத்தினால், மிக மோசமான பாதிப்புகளை நாம் தவிர்க்கவும் முடியும் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாடுகள் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டச்செய்வதற்கு இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
உலகின் எல்லா கண்டங்களிலும் சமுத்திரங்களை அண்டிய பிராந்தியங்களிலும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் கண்கூடாக தெரிகின்றன
கடைசியாக 2007-ம் ஆண்டில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையின் பின்னர், தற்போது 7 ஆண்டுகளின் முடிவில் புவி வெப்பமடைதலின் பாதிப்புகள் இரட்டை மடங்காகியுள்ளமைக்கான விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இந்தப் புதிய ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளன.
‘எல்லா மனிதர்களையும் பாதிக்கும்’
‘இந்த பூமிப் பந்தில் வாழும் எந்தவொரு மனிதரையும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தொடாமல் இருக்கப்போவதில்லை’ என்று ஐபீசிசி (IPCC) என்ற பருவநிலை தொடர்பான சர்வதேச குழுவின் தலைவர் ராஜேந்திர பச்சோரி கூறினார்.
அடுத்த 20-30 ஆண்டுகளில் இயற்கையின் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த அறிக்கை கணிக்கிறது.
குறிப்பாக, ஆர்க்டிக் கடல் பனிப்பாறை பகுதிகளில் 2 செல்சியஸ் அதிகரிப்புடன் வெப்பநிலை உயரலாம். அதனால் கடல் மற்றும் நன்னீர் நிலைகள் கடுமையாக பாதிக்கப்படலாம்.
சமுத்திரங்களில் அமிலத்தன்மை செறிவு அதிகரிப்பது பவளப்பாறைகளையும் அவற்றை ஒட்டிவாழும் உயிரினங்களையும் அச்சுறுத்தக்கூடும் என்றும் ஐநா அறிக்கை கூறுகிறது.
நிலத்தில் விலங்குகள், தாவரங்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் மேட்டு நிலங்களை நோக்கி நகரலாம். மேலும் அவை துருவங்களை நோக்கி இடம்பெயரக்கூடும்.
உணவுத் தட்டுப்பாட்டுக்கும் பஞ்சம் இருக்காது
ஒட்டுமொத்தத்தில் இந்த நூற்றாண்டு மாறும்போது மனித குலமும் கடுமையான பருவநிலை பாதிப்புகளுக்கு முகம் கொடுத்தாகவேண்டிய நிலை ஏற்படும் என்பது தான் இந்த ஆய்வறிக்கையின் சுருக்கம்.
2050-இல் உணவுத் தட்டுப்பாடு?
2050-ம் ஆண்டாகின்றபோது சோளம், நெல், கோதுமை போன்ற உணவு பயிர்ச்செய்கைள் கடுமையாக பாதிக்கலாம். அதன்பின்னர், பல பிராந்தியங்களில் உணவு உற்பத்தி இன்னும் மோசமாகும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
அதுமட்டுமன்றி, 2050-இல் உலக சனத்தொகையும் 9 பில்லியனைத் தொட்டுவிடும். அதற்கேற்றாப்போல் உலக உணவுத் தேவையும் அதிகரித்துவிடும் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
மனிதர்களின் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ள மீன்களும் நீரின் வெப்பம் தாளாமல் வேறு இடங்களுக்கு இடம்பெயரக்கூடும்.
குறிப்பாக, வெப்பமண்டல பிராந்தியங்கள் பலவற்றிலும் அன்டாட்டிகா பகுதியிலும் மீன்வளம் 50 வீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். -BBC
பொறுப்பில்லா மனிதகுலத்திற்கு இயற்கை தரும் அமைதியான பாடம். மனிதனுக்கு வெறி இருக்கும் அளவிற்கு இயற்கையோடு ஒன்றிவாழும் அறிவு இல்லை என்பது இதிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது.