உக்ரைனிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கான தங்களது விருப்பத்தினை ஒரு வாக்கெடுப்பின் மூலம் தெரிவித்த கிரிமியாவை உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
கடந்த மாதம் 21ஆம் தேதியன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கையெழுத்தின் மூலம் இந்த இணைப்பினை உறுதி செய்தார்.
இதனையடுத்து, ரஷ்யாவில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜி-8 எனப்படும் வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு கூட்டம் சில நாட்கள் முன்னதாகவே, கடந்த வாரம் பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸில் நடைபெற்றது. ஜி-8 கூட்டமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டதாக இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கிரிமியா பகுதியுடன் தரைவழி தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வசதியாக உக்ரைனுக்குள் எந்நேரமும் ரஷ்யப் படைகள் ஊடுருவக் கூடும் என ஐரோப்பிய நாடுகளுக்கான அமெரிக்காவை சேர்ந்த நேட்டோ படையின் தளபதி தற்போது அச்சம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லைப் பகுதியில் இதற்காக சுமார் 40 ஆயிரம் வீரர்களை தயார் நிலையில் ரஷ்யா குவித்து வைத்திருப்பதை மேற்கோள் காட்டியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கான நேட்டோ பாடையின் தளபதி பிலிப் ப்ரீட்லோவ், ‘அளவுக்கு மிஞ்சிய அதிகமான படைகளை குவித்து வைத்துள்ள ரஷ்யா, இன்னும் 3 அல்லது 5 நாட்களுக்குள் முழுவீச்சில் உக்ரைனுக்குள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளது போல் தோன்றுகிறது’ என்று அச்சம் தெரிவித்துள்ளார்.