உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக, அந்நாட்டுடனான விண்வெளி சார்ந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா அறிவித்துள்ளது.
இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பான செயல்பாடுகளில் ரஷிய விண்வெளி ஆய்வு நிலையத்துடனான கூட்டு நடவடிக்கை தொடரும் என்றும் நாசா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான குறிப்பாணையின் நகல், அமெரிக்க செய்தி நிறுவனமான “தி வெர்ஜ்’-ன் இணையதளத்தில் முதலில் வெளியிடப்பட்டது.
இரு நாடுகளிடையேயான விண்வெளி விஞ்ஞானிகளின் பயணங்களும், மின்னஞ்சல், தொலைத்தொடர்பு மாநாடுகள் மற்றும் காணொளிக் காட்சிகள் போன்ற நடைமுறைகளும் நிறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பான செயல்பாடுகளோ, ரஷியாவின் பங்களிப்புடன் அந்நாட்டுக்கு வெளியே மேற்கொள்ளப்படும் கூட்டங்களின் செயல்பாடுகளோ பாதிக்கப்படாது என்றும் அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில், அமெரிக்க-ரஷிய கூட்டுறவை பாதிக்கும் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை என நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்க எம்.பி.க்களிடம் தெரிவித்திருந்தார்.
ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மட்டுமே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வதற்கான ஒரே விண்வெளி ஓடமாக உள்ளது நினைவுகூரத்தக்கது. அதில் பயணம் செய்யும் அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவருக்கு கட்டணமாக சுமார் 7 கோடி டாலரை (இந்திய மதிப்பில் ரூ.425 கோடி) ரஷியாவுக்கு அமெரிக்கா செலுத்துகிறது.