காவல் துறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், தவறான நடத்தை பற்றிய சுதந்திர ஆணையம்(IPCMC) அமைவதில் இன்னும் காலதாமதம் கூடாது

kula-மு. குலசேகரன், ஏப்ரல் 5, 2014.

மூன்று நாள்களுக்கு முன்பு கோலாலம்பூரில் மனித உரிமை கண்காணிப்பு குழு வெளியிட்ட “பதிலில்லை, மன்னிப்பும் இல்லை : காவல் துறையின் மனித  உரிமை மீறல் மற்றும் பொறுப்பு”  என்ற அறிக்கையில் 2005ல் இருந்து 2012ம் ஆண்டுகளுக்கிடையில் போலீசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் வெறும் 7 விழுக்காடு  மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், 50 விழுக்காட்டிற்கு மேலான குற்றச்சாட்டுக்கள் முழுமையாக விசாரிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

 

 

சட்டத்திற்கு புறம்பாக இளைஞர்களை  கொலை செய்யப்படுதல்காவல் நிலையத்தில் ஏற்படும் திடீர் மரணங்கள், வழக்கறிஞர்களை மிரட்டுதல்,  தெரு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது பத்திரிகையாளர்கள் தாக்கப்படுதல்,  இது போன்ற காவல் துறையின் அட்டூழியங்களையும், தவறான போக்கையும்  அந்த அறிக்கையில் துள்ளியமாகவும் நெஞ்சை பதறவைக்கும் அளவிலும் எழுதப்பட்டுள்ளது.

 

 

அமுலாக்கத் துறையின் நேர்மை  ஆணையம் (EAIC) அமைக்கப்படுவதை  பாக்காத்தன் ராக்யாட்டும் பல அரசு சாரா அமைப்புக்களும் ஏற்கனவே குறை கூறி வந்துள்ளன.

 

 

இந்த மனித  உரிமை  கண்காணிப்பு குழுவின் அறிக்கையானது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இஎஐசி யால் காவல் துறையின் அத்துமீறல்களையும் ஒழுங்கீனத்தையும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்பதற்கு ஒரு சரியான சான்று.

 

உண்மையில் தணிக்கை செய்யப்பட்ட, காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறான நடத்தை பற்றிய சுதந்திர ஆணையத்தின் (IPCMC) தோன்றலான இஎஐசி காவல்துறையின் அத்துமீறல்களை துடைப்தொழிப்பதில் முற்றிலுமாக  தோல்வி கண்டுள்ளது எனலாம்.

 

அரசாங்கம் வெற்றுக் காரணங்களைக் கூறாமல் உடனடியாக அரசு ஆணையத் தலைவர் முஹமட் சைனுடின் பரிந்துரைத்த IPCMC யை முடுக்கிவிட வேண்டும்..

 

இது அமைவதை எதிர்த்துப் பேசிய உள்துறை அமைச்சர் IPCMC அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும் இயற்கை  நீதிக்கு  புறம்பானது எனவும் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

 

ஆனாலும், அரசு விசாரணை ஆணையத்திற்கு  தலைமையேற்றிருந்த    முஹமட்  சைனுடின் அவ்வாணையம் பரிந்துரைத்த IPCMC அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல என மறுப்பு தெரிவித்திருந்தார்.

அரசியல் சாசனத்தின் 140 ஆவது சரத்தின்படி, தேவையானால் நாடாளுமன்றம் காவல் துறையின் ஒழுக்கத்தையும் அத்து மீறல்களையும் கட்டுப்படுத்த சட்டம் வழி வகை செய்யாலாம் என கூறுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

 

ஆகவே,  இது எந்த வகையிலும் அரசியல் சாசனத்திற்கு  புறம்பானது அல்ல என அவர் அமச்சரின் அறிக்கைக்கு மறுப்பு தெரிக்கும்வகையில் கூறியுருந்தார்.

 

சென்ற வருடம், குகன் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி வி டி சிங்கம் கூறுகையில், வழக்கில் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் காவல்துறை மேற்கொள்ளும் விசாரணையில் முழு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதால், இந்த ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறித்தியிருந்தார்.

 

 

சக்தி வாய்ந்த IPCMC யால் மட்டுமே மக்களின் நம்பிக்கையயை மேலோங்கச் செய்யமுடியும் என்பதோடு காவல்துறையின் அத்துமீறல்களையும் கட்டுப்படத்த முடியும் என்பது தெளிவாகிறது.

 

 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  இது  போன்ற கண்காணிக்கும் ஆணையங்கள் செயல்படும்போது மலேசியஅரசாங்கம் மட்டும் IPCMC யை அமைப்பதற்கு ஏன் அஞ்சவேண்டும் ?

 

காவல் துறையின் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த போதிய அரசியல் துணிவு  இல்லாததே இதற்குக் காரணம்.

 

இனியும்  காலம் தள்ளாமல் இந்த IPCMC யை உடனடியாக அரசாங்கம் அமைக்க வேண்டும்.

 

 

TAGS: