ரஷியாவுடன் இணைவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த உக்ரைனின் கிழக்குப் பகுதி மக்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டின் கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தில் பொதுவாக்கெடுப்பு நடந்து, கடந்த மாதம் 16ஆம் தேதி ரஷியாவுடன் கிரீமியா இணைந்தது.
அடுத்த மாதம் 25ஆம் தேதி உக்ரைன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதி மக்கள் இதுபோன்ற கோரிக்கையை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரஷிய ஆதரவாளர்கள் வெளியேற்றம்: இதனிடையே, உக்ரைனின் கிழக்குப் பகுதியான கார்கீவ் நகரில், தாங்கள் கைப்பற்றி வைத்திருந்த அரசுக் கட்டடங்களில் இருந்து ரஷிய ஆதரவாளர்கள் வெளியேறி விட்டதாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் ஆர்சென் அவாகோவ் கூறியுள்ளார்.
இது குறித்து ஃபேஸ் புக் இணையதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், “கார்கீவ் நகர் அரசு கட்டடம் பிரிவினைவாதிகளிடம் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டு விட்டது. இதற்காக உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ரஷிய ஆதரவாளர்கள் எவ்வாறு வெளியேறினர் என்ற விவரத்தை அவர் குறிப்பிடவில்லை.
முன்னதாக, உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்றும், ரஷியா! ரஷியா! என்ற கோஷத்துடனும் ஒரு குழுவினர் அங்குள்ள முக்கிய அரசு கட்டடங்களுக்குள் நுழைந்து அவற்றை கைப்பற்றியிருந்தனர்.
கார்கீவ், டொனெஸ்ட்க் மற்றும் லுங்கான்ஸ்க் ஆகியவற்றில் உள்ள அரசு கட்டடங்களையும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.
நீடிக்கும் பதற்றம்: உக்ரைனில் எதிர்ப்பாளர்கள் அளித்த நெருக்கடியால் தலைநகர் கீவை விட்டு முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியேறிய நாள் முதல் ரஷியாவின் தலையீட்டால் அந்நாட்டில் பதற்றம் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.