மத அடையாளங்கள் விவகாரத்தில் அமெரிக்கா பாரபட்சம்: சீக்கிய அமைப்புகள்

sikhஅமெரிக்க ராணுவத்தில் மத அடையாளங்களை வெளிப்படுத்துவது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் பாரபட்சமானது என்றும், இந்த விவகாரத்தில் அந்நாடு பிடிவாதம் பிடித்து வருவதாகவும் அங்குள்ள சீக்கிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தற்போது கொண்டுவந்துள்ள புதிய விதிமுறையின் கீழ், ராணுவத்தில் இருக்கும் சீக்கியர்கள் தங்களது மத அடையாளங்களான தலைப்பாகையை அணிவதற்கும், தலைமுடி மற்றும் தாடியை வளர்த்துக் கொள்வதற்கும் அனுமதி இல்லை.

இதுகுறித்து அமெரிக்க அரசின் பாதுகாப்புப் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், சீக்கிய கூட்டமைப்பின் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான இயக்குநர் ராஜ்தீப் சிங் கூறியுள்ளதாவது:

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளினால் ராணுவத்தில் சீக்கியர்கள் சேருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும், தற்போது ராணுவத்தில் உள்ள சீக்கியர்கள் தங்களது பணியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும்.

வெற்றிகரமாக ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், நாட்டுக்கு சேவை செய்வதற்கு மத ரீதியான பிரச்னைகள் தடைகளாக இருக்கக் கூடாது.

அமெரிக்க ராணுவத்தில் பல்வேறு சாகசங்கள் புரிந்து தற்போது உயரதிகாரிகளாக இருக்கும் 3 சீக்கியர்கள் மட்டும் மத அடையாளங்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறையின் கீழ் அவர்களது உரிமையும் பாதிக்கப்படுகிறது.

எனவே, மத அடையாளங்களை பயன்படுத்துவதில் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று ராஜ்தீப் சிங் கூறியுள்ளார்.