ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

“”உக்ரைன் மீதான தலையீட்டை அதிகரித்து வரும் ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உக்ரைனில் அத்துமீறலில் ஈடுபடும் ரஷிய ஆதரவாளர்கள் ஆயுதங்களை உடனடியாக கீழே போட வேண்டும் என்றும் அவர் கெடு விதித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிபர் ஒபாமா, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோர் உக்ரைன் பிரச்னை குறித்து தொலைபேசியில் பேசினர். அப்போது, உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை ரஷியா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தினர்.

“அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலகின் பிற நட்புநாடுகள், ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிப்பதால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்’ என்று மெர்க்கலிடம் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

உக்ரைன், ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் ஆகியோர் எதிர்வரும் கூட்டத்தில் இந்தப் பிரச்னையை விவாதிக்க உள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் ஜி7 நாடுகள் (அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி) மற்றும் ரஷியா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளும் கலந்து கொண்டன.

முன்னதாக, ரஷிய நிதி அமைச்சர் ஆன்டன் சிலுவானோவிடம், அமெரிக்க நிதியமைச்சர் ஜேக்கப் லியூ கூறுகையில், “”உக்ரைன் மீதான நடவடிக்கையை ரஷியா கைவிடாவிட்டால், அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிப்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. கிரீமியாவை ரஷியா இணைத்துக் கொண்டது சட்டத்துக்குப் புறம்பானது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு ஆதரவு உண்டா? கூட்டத்துக்குப் பிறகு ஜி-7 நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும், ரஷியா மீதான பொருளாதாரத் தடை குறித்து அமெரிக்கா தெரிவித்த யோசனைக்கு பிற நாடுகள் ஆதரவு அளித்ததா என்பதை தெளிவாக்கும் வகையிலான கருத்துக்கள் கூட்டறிக்கையில் இடம் பெறவில்லை.

உக்ரைன் விவகாரம் காரணமாக ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெறவிருந்த மாநாட்டை ஜி-7 நாடுகள் புறக்கணித்திருந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.