சிவில் சட்டத்தின் கீழ் தமது கடமையைத் தட்டிக்கழித்தார் ஐஜிபி காலிட்

-மு. குலசேகரன், ஏப்ரல் 13, 2014.

igpஇஸ்லாத்திற்கு மதம் மாறி விட்ட தமது முன்னாள் கணவர் தமது குழந்தையை தம்மிடமிருந்து பறித்துச் சென்றது குறித்து இந்து தாயார் தீபா செய்துள்ள புகார் மீது போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு நியாயம் கூறிய போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பக்காரை கடுமையாக கண்டித்து எழுப்பப்பட்ட ஆட்சேபக் குரல்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

இரு நீதிமன்றங்கள் இரு பெற்றோர்களுக்கும் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை அளித்துள்ளதுதான் போலீஸ் இப்புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம் என்று காலிட் வாதித்துள்ளார்.

“இந்த வழக்கில், இரு நீதிமன்றங்கள் இருக்கின்றன, ஒன்று சிவில், மற்றொன்று ஷரியா நீதிமன்றம். ஆகவே, முதலில் இரு தரப்பினரும் (பெற்றோர்கள்) தங்களுடைய விவகாரத்தை தீர்த்துக் கொள்வது நல்லது என்று நான் கருதுகிறேன்”, என்று காலிட் கூறியதாக சொல்லப்படுகிறது.

இவ்விவகாரத்தில் ஐஜிபின் நடுநிலைமை போக்கு பொறுப்பைத் துறப்பதற்குச் சமமானதாகும். அவரது பதவி நாட்டின் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களை அமலாக்கம் செய்யும் தலைமை அதிகாரியுடையதாகும். அவர் ஷரியா நீதிமன்றத்தின் வரையறைக்கும் உட்பட்டவர் என்ற கூற்றுக்கு எவ்வித அடிப்படையும் கிடையாது.

முன்னாள் சட்ட அமைச்சரும் தற்போதைய சுற்றுப்பயண அமைச்சருமான நஸ்ரி அசிஸ் சரியாக சுட்டிக் காட்டியுள்ளது போல், பாதிப்புக்குள்ளான தீபா போலீசிலில் புகார் செய்துள்ள இச்சம்பவம் ஒரு தெள்ளத்தெளிவான கடத்தல் சம்பந்தப்பட்டதாகும்.

Hindu mumதீபா மற்றும் அவரது பிரிந்து விட்ட கணவர் என். வீரன் ஆகியோரின் திருமணம் சிவில் சட்டத்தின் கீழ் நடைபெற்றது. கடந்த வாரம், அதே சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்றம் தீபாவுக்கு அவரின் இரு குழந்தைகளையும் பராமரிக்கும் உரிமையை வழங்கியது.

ஆகவே, ஐஜிபி நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர் நஸ்ரியிடமிருந்து ஆலோசனை பெற வேண்டும்.

அவர் தமது கடமையை ஆற்றத் தயாராக இல்லை என்றால், சட்டத்தை அமலாக்கம் செய்பவர் என்ற அவரது பணியை கைவிட்டவர் என்று கருதப்படுவார். அந்நிலையில், அவர் போலீஸ் படையின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

2009 ஆம் ஆண்டில், குழந்தைகள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்படும் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன், ஏனென்றால், மதkula மாற்றத்திற்காளாகத தரப்பு சட்ட பரிகாரத்திற்கான நம்பிகை ஏதும் இன்றி அவதிப்படுகிறது.

உடனடியாக, ஓர் உயர்மட்ட அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டது. அப்போதைய சட்ட அமைச்சர் நஸ்ரி அசிஸ் குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறினால், குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவர் மதம் மாறுவதற்கு முன்னால் பின்பற்றப்பட்ட அதே மதத்தில் வளர்க்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்த மனவேதனை அளிக்கும் பிரச்சனையைக் கையாள்வதற்கு சட்டங்கள் வரையப்படும் என்று அவர் கூறினார். இந்த அறிவிப்பு செய்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், அதிகமாக எதுவும் செய்யப்படவில்லை.

இவ்விவகாரத்தில் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான அரசியல் திண்மை இல்லாதிருப்பது தெரிகிறது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களின் குழந்தை பராமரிப்பு போராட்டத்தில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கணவர் இஸ்லாத்திற்கு மதம் மாறியதோடு குழந்தைகளைப் பராமரிப்பதற்கான ஷரியா நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்கு முன்னதாகவே அவர் அவர்களது மூன்று குழந்தைகளையும் மதமாற்றம் செய்ததால் பாதிக்கப்பட்ட. எம். இந்திரா காந்திக்காக போராடி வரும் வழக்குரைஞர் என்ற முறையில் நான், இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்படுவதால் ஏற்படும் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஓர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்ச் 2010 இல் நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தேன்.

ஈப்போ உயர்நீதிமன்றத்தில் குழந்தைகள் பராமரிப்பை பெறுவதில் இந்திரா வெற்றி பெற்ற வேளையில், ஷரியா நீதிமன்றம் அவர்களின் இரு மகள்களையும் ஒரு மகனையும் பராமரிக்கும் உரிமையை அவரது கணவர் கே. பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் அப்துல்லாவுக்கு வழங்கிற்று.

நான் நாடாளுமன்றத்தில் கூறினேன், “நாட்டின் இணையான சட்டங்கள் அமைவுமுறை ஷரியா மற்றும் சிவில் நீதிமன்றங்களுக்கிடையில் ஒரு விதமான சட்ட சூனியத்தை விளைவித்திருக்கிறது. இவ்விரு சட்டங்களுக்கிடையிலான கடும்சச்சரவுகளால் ஏராளமான குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனது நிலைப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், “மதமாற்றங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த விரித்துரை, முடிந்த முடிவு மற்றும் நம்பப்படுந்தன்மை ஆகியவற்றை அளிப்பது நாடாளுமன்றத்தின் கடமை.”

 

 

 

 

TAGS: