சீனா, கொரிய நாடுகளைச் சீண்டும் ஜப்பான்

yasukuni_shrine_001இரண்டாம் உலகப்போரில் உயிரை நீத்த ஜப்பானிய வீரர்களின் நினைவிடமாகப் யாசுகினி போர் நினைவிடம் அந்நாட்டவர்களால் போற்றப்படுகின்றது

எனினும் அங்கு சீனா, கொரியா நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க்கைதிகளும் புதைக்கப்பட்டது அந்த நாடுகளின் உணர்வுகளில் இன்னும் ஆறாத ரணமாகவே உள்ளது.

ஏற்கனவே தங்களது எல்லைப் பிரச்சினை மற்றும் கிழக்கு சீனக் கடலில் உள்ள தீவுகளின் மீதான உரிமைப் பிரச்சினை போன்றவற்றால் ஜப்பானுடன் இரண்டு நாடுகளும் உரசிக் கொண்டிருக்கும்போது ஜப்பானிய உயர்தலைவர்கள் மரியாதை செலுத்தும்விதமாக யாசுகினி போர் நினைவிடத்திற்கு சென்று வருவது அந்நாடுகளின் கோபத்தைக் கிளறி விடுவதாகவே அமைந்து வருகின்றது.

கடந்த 2012ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் ஷின்சோ அபே அந்த ஆண்டு அக்டோபர் மாதம் யாசுகினி நினைவிடத்திற்கு சென்றார். தனிப்பட்ட முறையில் இரண்டாம் உலகப் போரின் குறிப்பிடத்தக்க இவோ ஜிமா யுத்தத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் சென்றதாக இவர் கூறியபோதும் சீனாவும், கொரியாவும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின.

இந்த நிலையில் ஜப்பானின் உள்துறை அமைச்சர் யொஷிடகா ஷிண்டோ, யாசுகினி போர் நினைவிடத்திற்கு நேற்றும் விஜயம் செய்துள்ளார்.

சமீபத்தில் தி ஹேக்கில் நடைபெற்ற அணு ஆயுத எதிர்ப்பு மாநாட்டை ஒட்டி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் கொரியாவும், ஜப்பானும் தங்களின் முதல் சந்திப்பினை மேற்கொண்டன.

இதனைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் ஆசியாவின் நான்கு நாடுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில், அமைச்சரின் போர் நினைவிட பிரார்த்தனை அண்டை நாடுகளிடையே உரசலை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.