உக்ரைனின் கிழக்குப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தை ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று சனிக்கிழமை கைப்பற்றிக்கொண்டது. அவர்கள் ரஷிய ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உக்ரைனின் உள்துறை அமைச்சர் ஆர்சென் அவாகோவ், ஃபேஸ்புக் இணையதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு குழுவினர் சீருடையில் வந்து டொனெட்ஸ்க்கில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்லாவ்யான்ஸ்க் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அதிகாலையில் திடீர் தாக்குதல் நடத்தி அதனைக் கைப்பற்றியுள்ளனர்.
பின்னர், ஆயுதங்களுடன் வந்த மற்றொரு குழுவினர் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் அரசு அலுவலகத்தைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால், அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு உக்ரைனின் சிறப்புப் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே ரஷிய ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்ட டொனெட்ஸ்க் நகரில் அரசு அலுவலகங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். மேலும், தன்னிச்சையாக பாதுகாப்பு அமைச்சராக அறிவித்துக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்தப் பதிவில் உக்ரைன் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷியாவின் தலையீட்டால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.
நேட்டோ படை: உக்ரைன் பிரச்னை தீவிரமடைந்து வருவதையொட்டி நிலவும் அச்சத்தை போக்கும் வகையில் நேட்டோ படைகள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் சோவியத் நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்தப் பிராந்தியம் புதிய பனிப்போரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.
ரஷிய எல்லையையொட்டிய பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா மற்றும் லிதுவேனியா, உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா ஆகிய நாடுகள் ரஷிய பூர்வீக மக்களை அதிகம் பெற்றிருப்பதால் உக்ரைனின் கதி நமக்கும் ஏற்படும் என்று அவை அஞ்சுகின்றன.
எஸ்தோனிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்வென் மிக்செர் அந்நாட்டு வானொலியில் பேசுகையில், “”பால்டிக் பிராந்தியத்தில் தற்போது உள்ள நேட்டோ படைகள் அதிகரிக்கப்படும். அதன் விமானப்படை ரோந்து வலுப்படுத்தப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.
போலந்தின் வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர் ஜாரோஸ்லாவ் காக்ஸின்ஸ்கி கூறுகையில், “”அமெரிக்கப் படைகளை போலந்தில் நிறுத்தினால் மட்டுமே ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். இங்கு நேட்டோ படைகள் மீதான கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் இது” என்றார்.
ஜி-20 நாடுகள் கண்காணிப்பு: வாஷிங்டனில் அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக அந்நாடுகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில், “உக்ரைனின் பொருளாதார நிலைமையை ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கண்காணிப்பார்கள். அந்நாடு சந்திக்கும் பொருளாதாரப் பிரச்னைக்கு கொள்கை ரீதியான ஆலோசனை வழங்குவது மற்றும் நிதி பெறுவதற்கு ஜி-20 நாடுகள் தூண்டுகோலாக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜான் கெர்ரி ஆலோசனை: இதனிடையே, சர்வதேச சமூகத்துடன் இணைந்து உக்ரைனுக்கு உதவும் நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கெடுக்கும் வகையில், ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பல்நோக்கு கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பங்கேற்கவுள்ளார். இதற்காக இம்மாதம் 17ஆம் தேதி அவர் ஸ்விட்சர்லாந்துக்கு செல்கிறார். அங்கு, உக்ரைன், ரஷியா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் அவர் கலந்தாலோசிக்கிறார்.