யுக்ரெய்னின் கிழக்கிலுள்ள ஸ்லாவியன்ஸ்க் நகரில் இராணுவத்தினர் போல சீருடை அணிந்து வந்த ஆயுதமேந்திய நபர்கள் பாதுகாப்புத்துறைக் கட்டிடங்களை முற்றுகையிட்டுள்ளதை அடுத்து, அப்பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை அரச பாதுகாப்பு படைகள் ஆரம்பித்துள்ளதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சர் ஆர்சென் அவகொவ் தெரிவித்துள்ளார்.
யுக்ரெய்னின் அரச படையினர் மீது அந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அவகொவ் தெரிவித்தார்.
வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், ஜன்னல்கள் அருகே செல்ல வேண்டாம் என்றும் நகரவாசிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கிழக்கு யுக்ரெய்னில் ரஷ்ய ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய பிரிவினைவாதிகள் திட்டமிட்டும், ஒருங்கிணைந்தும் தாக்குதல்களை நடத்துவதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்கா வலுவான கண்டனங்களை தெரிவித்துள்ளது.
யுக்ரெய்ன் அதிகாரிகள் ஏதாவது வகையில் பலப்பிரயோகம் செய்தால், முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகள் அனைத்தும் பாதிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. -BBC