ரஷியாவுடன் உக்ரைன் கிழக்குப் பகுதியை இணைக்கலாமா? தேசிய பொது வாக்கெடுப்புக்கு இடைக்கால அதிபர் ஆதரவு

  • Ethnolingusitic_map_of_ukraine
  • உக்ரைனில் தேசிய அளவிலான பொது வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டின் இடைக்கால அதிபர்  அலெக்சாண்டர் துர்ச்சினோவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ரஷிய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உக்ரைனின் கிழக்குப் பகுதியில், டொனெட்ஸ்க் நகர் உள்ளிட்டவற்றில் அரசு கட்டடங்களை கைப்பற்றியுள்ள ரஷிய ஆதரவாளர்கள் பொது வாக்கெடுப்பு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

அவர்களின் வேண்டுகோளின்படி உக்ரைனின் எதிர்கால அந்தஸ்தை நிலைநாட்டும் வகையில் உள்நாட்டிலேயே உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷிய ஆதரவாளர்களுக்கு கூடுதல் உரிமைகளையும் வழங்குவதா அல்லது ரஷிய கூட்டாட்சியுடன் அவர்கள் இணையவதற்கு அனுமதிப்பதா என்பதற்கான தேசிய பொது வாக்கெடுப்பை நடத்தலாம் என்று துர்ச்சினோவ் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பொது வாக்கெடுப்பை அடுத்த மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து நடத்தலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

ஆதரவாளர்களுக்கு கெடு: முன்னதாக, உக்ரைன் கிழக்குப் பகுதியில் அரசு கட்டடங்களை ஆக்கிரமித்துள்ள ரஷிய ஆதரவாளர்கள் திங்கள்கிழமைக்குள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அதிபர் அலெக்சாண்டர் துர்ச்சினோவ் விதித்த கெடுவை ரஷிய ஆதரவாளர்கள் நிராகரித்து விட்டனர். இதனால் அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

ரஷியா கண்டனம்: துர்ச்சினோவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷிய வெளியுறவுத்துறை, இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக தீர்வு காண வேண்டும்’ என்று கூறியுள்ளது.

5 நகரங்கள் குறி:இதனிடையே, நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா. அரசியல் விவகாரத்துறை துணை பொதுச்செயலர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் டராங்கோ கூறுகையில், “”உக்ரைனின் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தப் பிராந்தியத்தின் 5 நகரங்களில் அரசு கட்டடங்களை கைப்பற்ற குறிவைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் கூறுகையில், “”ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் அரசு செய்தித்தொடர்பாளர் மற்றும் ஊடகங்கள் கட்டுக்கதைகளைப் பரப்பி விடுகின்றன. அவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.

பான் கீ மூன் எச்சரிக்கை: முன்னதாக, ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “”கிழக்கு உக்ரைனில் பிரச்னை தீவிரமாகி வருவது குறித்து பான் கீ மூன் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையால் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த மிகுந்த கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்” என்று கூறினார்.

10ஆவது கூட்டம்: உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் இணைக்க மறுத்து ரஷியாவுக்கு ஆதரவாக அப்போதைய அதிபர் விக்டர் யானுகோவிச் செயல்பட்டதால், எதிர்ப்பாளர்கள் அளித்த நெருக்கடியைத் தொடர்ந்து அவர் கடந்த பிப்ரவரி மாதம் நாட்டை விட்டு வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து உக்ரைனில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தில் 10ஆவது முறையாக இந்தப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.