ஆப்கானிஸ்தானில் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் அகமது ஷா வாஹீத், செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
காபூலை அடுத்த கைர்கானா என்ற இடத்தில் அகமது ஷா சென்ற காரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரையும், அவரது கார் ஓட்டுநரையும் கடத்திச் சென்றனர்.
அவரை மீட்பதற்கு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹஸ்மத்துல்லா ஸ்டேனிக்சாய் கூறினார்.
அகமது ஷா கடத்தலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தகவல்கள் இல்லை.
எனினும், ஆப்கானிஸ்தானில் பணத்துக்காக செல்வந்தர்கள் கடத்தப்பட்ட பல சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அந்த கோணத்தில் போலீஸôர் விசாரித்து வருகிறார்கள்.
இது தீவிரவாதிகளின் சதி வேலையாக இருக்கக்கூடும் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், அகமது ஷா கடத்தப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அமைச்சர் கடத்தப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.