ஈரான் நாட்டில் மரண தண்டனை கைதி மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டின் ராயன் நகரில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நடந்த தெரு சண்டையில் அப்துல்லா ஹுசைன் ஜடே ( 18) என்ற வாலிபரை பலால் என்ற மற்றொரு வாலிபர் கத்தியால் குத்தி விட்டான். இதில் ஜடே மரணமடைந்து விட்டான்.
இதற்கு பலால் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் கூடிய கூட்டத்திற்கு நடுவே தடுப்பு வேலிக்குள் பலால் கொண்டு வரப்பட்டான். அவனது கைகள் கட்டப்பட்டதுடன், கறுப்பு துணியால் கண்களும் கட்டப்பட்டன. அவனது கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டப்பட்டது. அதன் பின் பலால் மரண தண்டனைக்கு தயாரானான்.
இறுதி மூச்சு விட பலால் தயாரான நிலையில், அப்துல்லாவின் தாய் வேகமாக வந்து அவனது கன்னத்தில் அறைந்தார். பின்னர் அவனது கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். இதனை கண்ட மகிழ்ச்சியில் பலாலின் தாய் ஓடி வந்து அப்துல்லாவின் தாயை கட்டி கொண்டார்.
இதுகுறித்து அப்துல்லாவின் தந்தை அப்துல்கனி ஹுசைன் ஜடே கூறும்போது, கடந்த 3 தினங்களுக்கு முன்பு எனது மனைவியின் கனவில் எனது மூத்த மகன் வந்து உள்ளான். அவன், தான் நல்ல இடத்தில் இருப்பதாகவும் எனவே, பழிக்கு பழி வாங்க வேண்டாம் என்றும் எனது மனைவியிடம் கூறியுள்ளான். இது எனது மனைவியை அமைதியடைய செய்தது.
எனினும், எனது மகனை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பலால் செயல்படவில்லை என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். பலாலை அப்துல்லா அடித்து உதைத்து உள்ளான் என்று கூறியுள்ளார்.
பலாலுக்கு மரண தண்டனையை குறைக்க அந்த பெற்றோர் கூறியுள்ளனர். எனினும், அவர்களால் சிறை தண்டனையை குறைக்க அதிகாரம் இல்லை. பலால் விடுவிக்கப்படுவது குறித்து தற்பொழுது தகவல் வெளியிடப்படவில்லை.