மியான்மரின் மேற்கு பகுதி மாகாணமான ராக்கைனில் ஏற்பட்டுள்ள மதக்கலவரத்தை நிறுத்தி, அங்குள்ள உதவிக் குழுவினர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மியான்மரில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மோதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர்.
வன்முறை காரணமாக இம்மாத துவக்கத்தில் ராக்கைன் மாகாணத்தில் இருந்து உதவிக் குழுவினர்கள் வெளியேறியதால், அங்கு ஆயிரக்கணக்கானோர் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் கூறியதாவது:
மியான்மரில் சீர்திருத்தம் ஏற்பட தொடர்ந்து ஆதரவளிப்போம். ஆனால், இந்த வன்முறை விவகாரத்தில் அந்நாட்டு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் உயிரிழப்புகள் தொடரும். மேலும், உதவிக் குழுவினர்களின் சேவைகளும் தடைபடும்.
எனவே, ஜனநாயகம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தில் மியான்மர் அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமந்தா பாவர் கூறினார்.
உதவிக் குழுவினர்கள் தற்போது அந்த மாகாணத்தில் இருந்து விலகியுள்ள காரணத்தால் நிலைமை இன்னும் மோசமானதாக உள்ளது என்று மியான்மருக்கான ஐ.நா.வின் சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.
மேலும், அங்குள்ள மக்களுக்கு சர்வதேச மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், 1.40 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 7 லட்சம் பேர் கிராமங்களில் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, புத்த மதத்தினரால் குறிவைக்கப்பட்டுள்ள சர்வதேச உதவிக்குழுவைப் பாதுகாப்பதாக மியான்மர் உறுதியளித்துள்ளது.
வெறிபிடித்த பௌத்தர்களால் சிறுபான்மை மக்கள் தாக்க படும்போழுது உலகம் கைகட்டி கொண்டு வேடிக்கை பார்ப்பது ஏனோ? பௌத்தர்கள் சிறுபான்மையாக வாழுகின்ற நாடுகளில் பௌத்தர்கள் தாக்க பட்டால் அப்பொழுதும் உலகம் கைகட்டி கொண்டு தான் வேடிக்கை பார்க்குமா?